நிரைஆமா சேக்கும் நெடுங்குன்ற நாட! உரைஆமோ நூலிற்கு நன்று (நாலடி . 319) என்று கூறுகின்றது. இச் செய்யுளுக்குப் பழைய வுரையாசிரியராகிய பதுமனார், “திரண்ட பொருளைச் சொல்லலும் விரித்து உரைத்தலும், கடாவும் விடையுமாகச் சொல்லுதலும், இலேசானே பொருளை உரைத்தலும், எச்சவும்மைகளால் எஞ்சிய பொருளை உரைத்தலும் ஆகிய இந் நான்கு வகையானும் ஆராய்ந்து, விரிவான பொருளைக் காட்ட மாட்டாதார் சொற்கள், காட்டுப் பசுக்கள் நிரை நிரையாகத் தங்கும் உயர்ந்த மலை நாடனே! நூலிற்குப் பழிப்பில்லாத நல்ல உரையாமோ என்றவாறு” என்று பொருள் கூறுகின்றார். நீதி நூலாகிய நாலடியார், ஒரு நூலிற்கு அமைய வேண்டிய உரையின் சிறப்பியல்புகளைக் கூறுவது வியப்பாக உள்ளது. உரையின் பல்வேறு இயல்புகளைப் பொதுவாக எல்லோரும் அறிந்திருந்தினர்; சிந்தித்து வந்தனர் என்று கருத நாலடியார் இடந்தருகின்றது. நன்னூலின் பொதுப்பாயிரம் உரையின் பொது இலக்கணத்தைப் பின் வருமாறு கூறுகின்றது: பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம் விரிவு அதிகாரம் துணிவு பயனோடு ஆசிரிய வசனம்என்று ஈரேழ் உரையே. (பொதுப்-20) இச் சூத்திரத்திற்கு மயிலைநாதர் பின்வருமாறு பொருள் கூறுகின்றார்: “பாடம் சொல்லலும், கருத்துரைத்தலும், சொல்வகுத்தலும், சொற்பொருள் உரைத்தலும், பொழிப்புரைத்தலும், உதாரணம் காட்டலும், வினாத் தோற்றலும், விடை கொடுத்தலும், விசேடம் காட்டலும், விரிவு காட்டலும், அதிகார வரவு காட்டலும், துணிவு கூறலும், பயனொடு படுத்தலும், ஆசிரிய வசனம் காட்டலும் என்னும் இப்பதினான்கு பகுதியானும் உரைக்கப்படும் சூத்திரப் பொருள்” இவற்றுள் சிலவற்றைச் சங்கர நமசிவாயர் விளக்குகின்றார். அவர் விளக்கம் பின்வருமாறு: “இவற்றுள், விசேடமாவது - சூத்திரத்து உட்பொருளன்றி ஆண்டைக்கு வேண்டுவன தந்து உரைத்தல். |