பக்கம் எண் :

உரையாசிரியர்கள்96

    விரிவாவது - வேற்றுமை முதலிய தொக்கு நிற்பனவற்றை விரிக்க
வேண்டுழி விரித்து உரைத்தல்.

     அதிகாரமாவது-எடுத்துக்கொண்ட அதிகாரம் இதுவாதலின், இச்
சூத்திரத்து அதிகரித்த பொருள் இது என அவ்வதிகாரத்தோடு பொருந்த
உரைக்க வேண்டுழி உரைத்தல்.

     துணிவானது - ஐயுறக் கிடந்துழி இதற்கு இதுவே பொருள் என
உரைத்தல்.

     ஏனை, பொருள் விளங்கிக் கிடந்தன”

     மேலே காட்டிய ‘பாடம் கருத்தே’ என்ற சூத்திரவுரையின் கீழ்
மயிலைநாதர் உரையின் வேறு வகைகளைத் தொகுத்துக் கூறுகின்றார். அவர்
உரை பின்வருமாறு:

     1.    “தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்து உரைத்தல்
என்றும் இரு கூறும்;

     2.    பொழிப்பு, அகலம், நுட்பம் என்னும் மூவகையும்;

     3.   எடுத்துக் கோடல், பதங் காட்டல், பதம் விரித்தல், பதப்பொருள்
உரைத்தல், வினாதல், விடுத்தல் என்னும் அறுகூறும்;

     4.   பொழிப்பு, அகலம், நுட்பம், நூல்எச்சம், பதப் பொருள்,
உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல் என்னும் ஏழும்;

     5.    சொல்லே, சொல்வகை, சொற்பொருள், சோதனை, மறை நிலை,
இலேசு, எச்சம், நோக்கே, துணிவே, கருத்தே செலுத்தல் என்று ஈரைந்து
கிளவியும் நெறிப்பட வருவது பனுவல் உரையே என்னும் இப்பத்தும்:

     6. சூத்திரம் தோற்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல்,
வினாதல், விடுத்தல், விசேடங் காட்டல், உதாரணங்காட்டல், ஆசிரிய
வசனங் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக்
காட்டல், துணிவு கூறல், பயனோடு புணர்த்தல் என்னும் இப் பதின்
முப்பகுதியுமான - இம்மத விகற்பம் எல்லாம் இப் பதினான்கினுள்ளே
(‘பாடம் கருத்தே’ என்னும் சூத்திரத்தில் கூறப்பட்டவை) அடங்கும் எனக்
கொள்க.”

     மயிலைநாதர் மேலே ஆறாவதாகக் கூறிய சூத்திரம் தோற்றல், சொல்
வகுத்தல் முதலிய பதின்மூன்றினோடு கருத்துரைத்தல் என்ற ஒன்றைக்கூட்டி
உரை பதினான்கு வகைப்படும் என்று வீரசோழியம் கூறுகின்றது (வீர-178).