பக்கம் எண் :

97அறிமுகம்

     யாப்பருங்கல விருத்தியுரை உரையின் வகைகளை,

      முத்திறத் தானும், மூவிரு விகற்பினும்,
      பத்து விதத்தானும், பதின்மூன்று திறத்தானும்,
      எழுவகை யானும், இரண்டு கூற்றானும்,
      வழுவுநனி நீங்க, மாண்பொடும், மதத்தொடும்
      யாப்புறுத்து உரைப்பது சூத்திர வுரையே

என்று உரைக்கின்றது. பின்னர், முத்திறம் மூவிரு விகற்பம் முதலியவற்றை
மயிலைநாதர் விளக்கியது போல, விளக்கிச் செல்லுகின்றது. வழு என்பது
குன்றக் கூறல் முதலியபத்துக் குற்றம் என்றும், மாண்பு என்பது சுருங்கச்
சொல்லல் முதலிய பத்து அழகு என்றும், மதம் என்பது உடன்படல்
மறுத்தல் முதலிய ஏழுவகை என்றும் யாப்பருங்கல விருத்தியுரை
விளக்குகின்றது.

     நன்னூலில் பாயிரத்தில் உள்ள இரு சூத்திரங்கள், காண்டிகையுரை
விருத்தியுரை என்பனவற்றை விளக்குகின்றன.

    கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
    அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
    சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ காண்டிகை
                                (பொதுப்பாயிரம்-21)

என்பது காண்டிகை யுரையை விளக்கும் சூத்திரம்.

    சூத்திரத்து உட்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
    இன்றி யமையா யாவையும் விளங்கத்
    தன்னுரை யானும் பிறநூ லானும்
    ஐயம் அகலஐங் காண்டிகை உறுப்பொடு
    மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி
                                 (பொதுப்பாயிரம்-22)

என்பது விருத்தியுரையின் இலக்கணம் கூறும் சூத்திரம்.

     பலவேறு நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் உரையின்
வகைகளைப் பற்றிக் கூறியுள்ள விளக்கங்கள் நமக்கு மலைப்பைத் தரலாம்;
மிகுதியானவை என்று எண்ணத் தூண்டலாம். ஆனால் உரை செய்யும்
முயற்சியில் மிகுதியாக ஈடுபட்டுப் பெரிதும் உழைத்தவர்கள், நுணுகி நுணுகிச்
செய்த ஒப்பற்ற கலைக் கருவூலமே உரை நூல்கள் என்ற எண்ணத்தையும்
அவை உண்டாக்காமல் இல்லை.