பக்கம் எண் :

உரையாசிரியர்கள்98

4. உரை செய்யும் உதவி

    இலக்கிய வரலாற்றில் உரைகளுக்கு மிக உயர்ந்த இடமுண்டு.
தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கணஇலக்கியப் பயிற்சிக்கும் உரைகள்
பேருதவி புரிந்திருக்கின்றன. உரைகள் தோன்றியது நமது நற்பேறேயாகும்.
அவை தோன்றி இராவிடில், பழம்பெரும் இலக்கண இலக்கியச்செல்வங்கள்
அழியாமல் இருந்திருப்பினும் விளங்காமல் இருந்திருக்கும்; இருளடர்ந்து
உள்ளே நுழையாதபடி வாயில்கள் இறுக மூடி மண்மேடிட்டு முட்செடி
கொடிகள் முளைத்துக் கொடிய நச்சுயிர்கள் வாழ்கின்ற பழங்கோட்டைக்குள்
அகப்பட்டுக்கொண்ட பொற்குவியல்போல் பயனற்றுப் போயிருக்கும்.

     ஆங்கிலப் புலமைச் செல்வியும் ஆய்வாளரும் ஆகிய ரிஸ்டேவிட்ஸ்
(Mrs Rhys Davids) என்னும் அம்மையார், “இந்திய நாட்டில் உள்ள
பௌத்த சமய நூல்கள், இக் காலத்தவர் படித்து இன்புறுதற்கு ஏற்ற உரை
விளக்கங்கள் இல்லாத காரணத்தால் விளங்காமல் இருக்கின்றனவே!” என்ற
ஏக்கத்தால் பின் வருமாறு துன்பக்குரல் எழுப்புகின்றார்:

     “அந்நியர் செல்ல முடியாத இருளடர்ந்த குகைமடம் போன்றுள்ளன
இந் நூல்கள். இவைபற்றிய பரம்பரை வரலாறு, எங்கும் சுவர்வைத்து
மூடப்பட்டுள்ளன. பண்டைக்காலம் தன்னளவில் நில்லாது, நிகழ் காலத்தையும்
எதிர் காலத்தையும் அடக்கி ஆட்சி புரிகின்றது. இவற்றை எல்லாம்
நோக்கும்போது, நன்றாகத் திருவலகிட்டுச் சுத்தம் பண்ணி, அலங்கரித்துள்ள
ஓர் அறை, பலகணிகள் எல்லாம் நன்றாக அடைக்கப்பட்டுத் திரையிட்டு
உதய திசை சிறிதும் புலப்படக்கூடாத வண்ணம் அமைந்துள்ளது போல்
தோன்றுகிறது”*

     இத்தகைய ஏக்கமும் துன்பமும் நமக்குச் சித்தர் பாடல்களைக்
கற்கும்போது ஏற்படுகின்றன; மருத்துவ நூல்களைக் காணும்போது
எழுகின்றன; உரையில்லா நூல்களை நோக்கும் போதெல்லாம் உண்டாகின்றன.

பலவகைப் பயன்கள்

    தமிழ் மொழியும் இலக்கியமும் உரையாசிரியர்கள் இயற்றிய உரைகளால்
செழித்து வளர்ந்து வந்துள்ளன. இன்றும் புதுப்புது வகையாய்ச் சிந்திக்கும்
ஆராய்ச்சியாளர்களுக்கு உரைகள் பெரிதும் துணைசெய்து வருகின்றன.
மொழியியல் ஆராய்ச்


*இலக்கிய உதயம் II (1963) பக். 235 எஸ். வையாபுரிப் பிள்ளை.