சிக்கும், இலக்கியத் திறனாய்வுக்கும் உரைகள் செய்துவரும் உதவியைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம். 1. உரையாசிரியர்கள், தாம் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமைச் செல்வத்தை எல்லாம் தம் உரைகளில் கொட்டி நிரப்புவதால் நாம் அறிவு களஞ்சியத்தினுள் எளிதில் புகுந்து இன்புற முடிகிறது. 2. சில பாடங்களுக்கு உரையாசிரியர்கள் மிகவிரிவான உரையும் நயமிக்க விளக்கமும் எழுதியிருப்பதால் அவை இலக்கியப் பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன. விளங்காமல் இருந்த - ஐயத்திற்கு இடமாக இருந்த எத்தனையோ செய்திகள் வெளிப்படுகின்றன. 3. காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் இயல்பு, தனித்தன்மை ஆகியவற்றை உரை கொண்டே நாம் அறிய முடிகின்றது. 4. தமிழ் மொழியின் அமைப்பு, காலந்தோறும் எவ்வாறு மாறுதல் அடைந்து வந்துள்ளது என்பதையும், தமிழ் மக்களின் வாழ்க்கைநிலை, அரசியல்மாறுதல், பழக்கவழக்கம் ஆகியவற்றையும் உரைகள் உணர்த்துகின்றன. 5. கிடைத்தற்கரிய - இலக்கியச் சுவை மிகுந்த தனிப் பாடல்களைத் திரட்டி உரைகளே நமக்கு உதவுகின்றன. 6. ஏடுகளில் இருந்த பழைய நூல்களைப் பதிப்பித்தவர்களுக்கு, மூலத்தை அறிய உரைகளே துணைபுரிந்து வந்தன. “உரையைக் கொண்டு மூலத்தையும், மூலத்தைக் கொண்டு உரையையும் பல சமயங்களில் அறிந்துகொண்டதுண்டு”* 7. உரையாசிரியர்கள் மேற்கோளாகத் தரும் பாடல்கள், மூலநூல்களில் ஏற்படும் ஐயத்தைப் போக்கவும் நல்ல பாட வேறுபாடு அறிந்து பாடல்களின் பொருளைத்துணியவும் பயன்படுகின்றன. 8. சில பழைய நூல்களில் மறைந்தும் குறைந்தும் உள்ள பகுதிகளுக்கு உரிய பாடல்களை உரைகளே நமக்குத் தந்துள்ளன. தொல்காப்பியம், குறுந்தொகை, திருக்குறள், சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களின் பழைய அமைப்பு, அளவு, உட்பிரிவு ஆகியவை பற்றி உரைகள் நமக்கு அறிவிக்கின்றன. 9. மறைந்துபோன தமிழ் நூல்களின் பெயர், அவற்றை இயற்றிய புலவர்களின் பெயர், அந்நூல்களின் சிலபகுதிகள் ஆகியவற்றைப் பேணிக்காத்து வருபவை உரைகளேயாகும். *சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (1953) பக்கம் 174, டாக்டர் உ,வே.சா. |