இத்தகைய உதவிகள் பல செய்யும் உரைகளைத் தந்த உரையாசிரியர்களைப் பெருந் தொண்டர்கள் என்று போற்ற வேண்டும். இனி, அடுத்து வரும் பகுதிகளில் உரை செய்யும் உதவிகள் சிலவற்றை விரிவாகக் காண்போம். தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டிற்கும் அமைந்துள்ள உரை விளக்கங்கள் மொழியியல் ஆராய்ச்சிக்குத் துணைபுரிகின்றன. இவ்வாறே பிற்கால இலக்கண உரைகளும் அவ்வக் காலத்துத் தமிழ் மொழி அமைப்பை அறிவிக்கின்றன. தொல்காப்பியப் பொருளதிகார உரைகள் இலக்கியத் திறனாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றன. யாப்பு, அணி, பாட்டியல் பற்றிய உரை விளக்கங்கள் செய்யுளின் வடிவம் பற்றி அறிய உதவுகின்றன. உரைகள் - இலக்கியங்கள் மூல நூல்களைப் போலவே உரை நூல்களும் இலக்கியம் போல் இன்பம் ஊட்டுகின்றன. மூல நூல்களில் உள்ள எல்லாச் சிறப்புக் கூறுகளும் உரை நூல்களில் உள்ளன. உரைகளில், கற்பனைச்சிறப்பு வாய்ந்த உவமைகள் உள்ளன; எண்ண எண்ண இனிக்கின்ற இலக்கியச் சுவை மிகுந்த பகுதிகள் உள்ளன. சிந்தனையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்ற பல வகையான ஆராய்ச்சிகள் உள்ளன. எதுகை மோனைகள் அமைந்த - ஓசையின்பம் தருகின்ற வகை வகையான அழகிய உரை நடை, நூல் முழுதும் கொஞ்சி விளையாடுகின்றது. இறையனார் களவியல் உரையைப் படித்துக் கொண்டு வரும் போது, நூலாசிரியர் செய்த 60 சூத்திரங்களும் நம்நினைவிலிருந்து நீங்கி, உரையே நெஞ்சில் நிரம்பிவிடுகின்றது. நூலாசிரியர் குரலைவிட உரையாசிரியர் குரலே உரக்கக் கேட்கின்றது. உரையே தனி இலக்கியமாய்ப் பொலிகின்றது. மற்ற உரைகளும் இத்தகைய சிறப்பியல்பைப் பெற்று விளங்குகின்றன. தமிழறிஞர் அ. மு. பரமசிவானந்தம் உரைகளில் ஈடுபட்டு அவற்றைப் பின்வருமாறு போற்றுகின்றார்: “உரைகள் மூலங்களுக்கு உரைகளே என்னும் நினைவை மறப்பித்து, தாமே பேரிலக்கியங்களோ என்னும் நினைவையும் சிற்சில இடங்களில் உண்டாக்குகின்றன என்பதைப் பயின்றோர் நன்கு உணர்வர். ஒரு சில இடங்களை நோக்கின், ‘நூலாசிரியர் இத்தகைய நுண்ணுணர்வுடன் பாடினாரா? அன்றி உரையாசிரியர் உள வண்ணமும் உரை வண்ணமும் இத்தகைய ஏற்றத்தைத் தருகின்றனவா?” என்று வியக்கத் தோன்றும்.* *19-ஆம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி (1966) பக். 30. |