சுருங்கக் கூறின், நூலியற்றிய ஆசிரியர் கருத்து, காலந்தோறும் அந்த நூலைப் பயின்றவர் போற்றி உரைத்த நயம், காலவேறுபாட்டால் தோன்றிய கருத்துப் புதுமை, மாறுபட்ட கருத்தினர் தோற்றுவித்த சிந்தனைவளம் ஆகிய அனைத்தும், ஓரிடத்தில் திரண்டு நிற்கும் புலமைக் களஞ்சியமே உரை நூல்கள். புலமைக் களஞ்சியம் ஒரு நூலில் உள்ள ஏதேனும் ஒரு பாடலோ பகுதியோ உரையாசிரியர்களால் நன்கு விளக்கப்பட்டிருத்தலும் உண்டு. பேராசிரியர் உவம இயலுள், ‘வேறுபட வந்த உவமத் தோற்றம்’ (உவம-32) என்னும் சூத்திரத்தின் கீழ், ‘வையங்காவலர்’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்கு (புறம்.8) மிக விரிவாகப் பொருள் எழுதியுள்ளார். மேலும் அவர், செய்யுளியலில், ‘நோக்கு’ என்ற செய்யுள் உறுப்பை விளக்கும்போது (செய்.104) ‘முல்லை வைந்நுனை’ என்ற அகப்பாட்டை (அக. 4) எடுத்துக் கொண்டு அரும்பெரும் விளக்கம் ஒன்றை எழுதியுள்ளார். இவ்விரு விளக்கங்களும் புலமைக்கும் விருந்தாய் அமைந்து, இலக்கியச்சுவை நல்கிக் கற்போரை இன்பக் கடலுள் ஆழ்த்துகின்றன. திருக்குறளுக்கு உரை எழுதாத - வேறு நூல்களுக்கு உரை கண்ட உரையாசிரியர்கள் சிலர், திருக்குறள் சிலவற்றிக்குச் சிறந்த விளக்கம் தந்துள்ளனர். அவை புதிய கருத்துடையனவாய் - சிறந்தவையாய் உள்ளன. நச்சினார்க்கினியர், ‘அகர முதல’ என்னும் முதற் குறளுக்கு எழுத்ததிகாரத்தில் சிறந்த விளக்கம் தருகின்றார். மேலும் அவர் சீவக சிந்தாமணியில், “சங்கு உடைந்தனைய” (சீவக-547) என்னும் செய்யுள் உரையில், “சங்கு சுட்டாலும் நிறம் கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியும் ஆம்; நத்தம் போற்கேடும் (குறள்-235) என்ப” என்று எழுதுகின்றார். ‘நத்தம் போற் கேடும்’ என்ற குறளுக்கு நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உரைக்கு மாறுபட்டதொரு கருத்தினைக் கொண்டுள்ளார். மயிலைநாதர், நன்னூல் உரையில், ‘பெயர் வினை’ என்னும் சூத்திரத்தின் (நன்-359) கீழ் பல குறட்பாக்களுக்குப் பொருள் கூறுகின்றார். அவற்றைத் திருக்குறள் உரையாசிரியர்களின் கருத்தொடு ஒப்பிடும் போது சில அரிய விளக்கங்கள் மயிலைநாதர் உரையில் வெளிப்படுவதைக் காணலாம். சங்கர நமசிவாயர் நன்னூல் உரையில் (நன்-360) ‘இணர் எரி தோய்வன்ன’ என்ற குறட்பாவுக்கு எழுதியுள்ள விளக்கம் பலமுறை கற்று மகிழத் தக்க வகயில் நுண்பொருள் பொதிந்துள்ளது. |