இருளில் ஒளி சில சொற்றொடர்களின் அரிய பொருளும் உரையாசிரியர்கள் உரையால் வெளிப்படுகின்றது. திருமுருகாற்றுப் படையின் பழைய உரையாசிரியர், ‘தலைக்கை தருதல்’ என்பதனை நன்கு விளக்கியுள்ளார். அப்பாடலில் குறிக்கப்படும் ஏரகம் என்னும் இடம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை என்பது அருணகிரிநாதர் கருத்தாகும். ஆனால் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், அவ்வாறு கருதவில்லை. ஏரகமும் சுவாமி மலையும் வேறு வேறு என்பது அவர் கருத்து (குன்றக் குரவை-தெய்வம் பராஅயது). நச்சினார்க்கினியரும் ஏரகம், மலைநாட்டில் உள்ள இடம் என்றே கூறியுள்ளார் (முருகு. 189). தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு, இயற்றியவர் பெயர் அறியப்படாத பழைய உரை ஒன்று உண்டு. அவ்வுரையின் வாயிலாக, வெண்களமர், கருங்களமர் என்ற சொற்களின் பொருள் விளங்குகின்றது. உரையாசிரியர்கள், பிற நூலில் உள்ள செய்யுட்களை மேற்கோளாகக் காட்டி எழுதிய இலக்கணக் குறிப்பும், விளக்கமும், ஆராய்ச்சி உலகில் நிலவி வந்த பல குழப்பங்களையும், முரண்பாடுகளையும் நீக்கி, புதிய ஒளி தந்துள்ளன. நற்றிணையில், கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழம், (கொக்கின் கூம்புநிலை யன் முகைய ஆம்பல்) தூங்குநீர்க் குட்டத்துத் துடும்என வீழும். - (நற். 280) என்று வரும் பாட்டிற்கு, உரையாசிரியர் (பின்னத்தூர் அ,நாராயணசாமி ஐயர்), “கொக்கு வந்து இருந்ததனால் கிளை அசைதலின் உதிர்ந்த இனிய மாங்கனியானது ... ஆழமான நீரிலே துடுமென வீழா நிற்கும்” என்று பொருள் எழுதுகின்றார். கொக்கு வந்து உட்கார்ந்ததால் மாங்கனி வீழ்ந்தது என்று கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. கொக்கு என்ற சொல்லுக்கு மாமரம் என்ற பொருள் உண்டு. இதை நினைவில் கொண்டு, நச்சினாரர்க்கினியர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இந்த அடிக்குக் கூறியுள்ள இலக்கணக் குறிப்பையும் நோக்கினால் பாடலின் பொருள் நன்கு விளங்குகின்றது. நச்சினார்க்கினியர், யாதன் உருபிற் கூறிற் றாயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும் -(சொல்-107) என்ற சூத்திரத்தின் கீழ், |