பக்கம் எண் :

103அறிமுகம்

     “கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழம்” என்புழியும் கொக்கினின்றும் என
ஐந்தாவதன் பொருளாயிற்று” என்று உதாரணம் காட்டி விளக்கியுள்ளார்.*

     எனவே, “கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழம்” என்ற அடிக்கு,
“மாமரத்திலிருந்து உதிர்ந்த இனிய பழம்” என்று பொருள் கொள்வதே
பொருத்தமாக உள்ளது. இத்தகைய சிறந்த பொருள் விளக்கத்திற்கு
நச்சினார்க்கினியர் உரை பேருதவி புரிகின்றது.

     குறுந்தொகையில், ‘அரிற்பவர்ப் பிரம்பின்’ (குறுந்-9) என்ற பாட்டில்,

     - நெடுந்தேர் அஞ்சி
    கொன்முனை இரவூர் போலச்
    சிலவா குகநீ துஞ்சும் நாளே

என்ற அடிகளுக்கு டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் பின்வருமாறு பொருள்
எழுதுகின்றார்: “அதியமான் அஞ்சி என்னும் உபகாரியினது, அச்சத்தைச்
செய்யும் போர்க்களத்தில் உள்ள இரவையுடைய ஊரில் உள்ளார் போல
நீ துயிலும் நாட்கள் சிலவே ஆகுக.”

     ‘இரவூர்’ என்பதற்கு அவர் கொண்ட பொருள் இரவையுடைய ஊர்’
என்பதாகும். ஆனால், இரவூர் என்பது ஓர் ஊரின் பெயர் என்றும், அவ்வூர்
அதியமான் நெடுமானஞ்சிக்கும் பெருஞ்சேரல் இரும்பொறை என்றும் சேர
மன்னனுக்கும் போர் நடந்த இடத்திற்கு அருகே இருந்தது என்றும், போரின்
முடிவில் அவ்வூர் பாழ்பட்டது என்றும் தகடூர் யாத்திரையிலிருந்து
உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள் பாடல்கள் அறிவிக்கின்றன.

     இரவூர் எறிந்து நிரையொடு பெயர்ந்த
     வெட்சி மறவர்
                                             (புறத்-3 உரை)

என்பது நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டும் பாடலின் பகுதியாகும்.
இங்கே இரவூர் என்பது ஐயத்திற்கு இடமின்றி ஓர் ஊரின் பெயராகவே
உள்ளது.

     சீவக சிந்தாமணியில் ‘காவில் வாழ்பவர்’ என்ற பாடல் உரையின் கீழ்,
நச்சினார்க்கினியர், “ஏவல் முரணும் என்றாற் போல” என்று எழுதுகின்றார்.
மேற்கூறிய பாட்டில் ‘ஏவல்’ என்ற


* கொக்கினுக் கொழிந்த தீம்பழம்; நாகுவேயொடு நகுபு வீங்குதோள் -
இவற்றுள் நான்கும் மூன்றும் ஐந்தாவதன் பொருட்டாயும் இரண்டாவதன்
பொருட்டாயும் நின்றன. (பிரயோக விவேகம் கராகபடலம், உருபுமயக்கம்.)