பக்கம் எண் :

உரையாசிரியர்கள்104

சொல் இடம் பெற்றுள்ளது. அதற்குப் பொருள் ‘ஏவன் முரணும்’ என்ற
இடத்துப் பொருள் உரைப்பது போல உரைக்க வேண்டும் என்ற கருத்தில்,
நச்சினார்க்கினியர் ‘ஏவன் முரணும் என்றார் போல’ என்று சுருக்கமாக
எழுதியுள்ளார். ‘எவன் முரணும்’ என்பதனை விளங்கா மேற்கோளாக
டாக்டர். உ.வே.சா. குறித்துள்ளார்.

     யாப்பருங்கலக்  காரிகையில், ‘உதாரண இலக்கிய முதல் நினைப்புக்
காரிகை’ ஒன்றில் (காரிகை-18) ‘ஏவின் முரணும் இருள் பரந்து’ என்று அடி
உள்ளது. இதில் உள்ள ‘ஏவின் முரணும்’ என்பது ஏவன் முரணும் என்றும்,
நச்சினார்க்கினியர் இவ்விடத்தையே தம் உரையில் எடுத்துக் காட்டினார்
என்றும் பெரியோர்கள் கருதுகின்றனர். இவ்வாறு கருதுவது பொருத்தமாகவே
உள்ளது.

     பரிமேலழகர் “எந்நன்றி கொன்றார்க்கும்” (குறள் 110) என்ற குறள்
உரையின் கீழ் “பெரிய அறங்களைச் சிதைத்த லாவது: ஆன்முலை
அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், குரவர்த் தபுதலும் முதலிய
பாதங்களைச் செய்தல்” என்று விளக்குகின்றார்.* “ஆன்முலை அறுத்த”
என்ற புறநானூற்றுப் பாடலை (புறம்: 34). கருத்திற் கொண்டு இவ்வாறு
எழுதுகின்றார். அப்பாடலில்,

     பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

என்ற அடியை,

     குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

என்ற பாடத்துடன் பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். பரிமேலழகர் கொண்ட பாடம் எல்லோராலும் போற்றி மேற்கொள்ளப்படுகின்றது.

காப்புப் பெட்டகம்

    பல நூறு ஆண்டுகள் கடந்து, பலப்பல தலைமுறையினரின் கையில்
தவழ்ந்து, கால வெள்ளத்தை நீந்தி நம்மிடம் வந்து சேர்ந்துள்ள பழம்பெரும்
நூல்கள், தோன்றிய காலத்தில் இருந்த அமைப்புடன் இன்று இல்லை. நூலின்
பெயர் மாறியிருக்கிறது; நூலில் உள்ள பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது;
நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களில் எண்ணிக்கை கூடி இருக்கிறது;
குறைந்திருக்கிறது. நூலின் பகுதிகள் சில - முன்னும் பின்னும்
நடுவும்-மறைந்திருக்கின்றன. பல நூல்கள் மறைந்து போய்விட்டன.

     இத்தகைய அரிய செய்திகள் பலவற்றை உரைவாயிலாகவே நாம்
அறிய முடிகின்றது.


* ஆறுமுக நாவலர் பதிப்பு