திருக்குறளுக்கு ‘முப்பால்’ என்ற பெயரே அது தோன்றிய காலம் முதல் பரிமேலழகர் காலம் வரை வழங்கி இருக்கிறது. பொய்யற்ற முப்பாற் பொருள்உரைத்தான் தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து என்றும், முப்பாலுக்கு, விழுப்பொருள் தோன்ற விரித்தினிது உரைத்தனன், பரிமேலழகன் என்றும் உரைச் சிறப்புப்பாயிரங்களில் திருக்குறள் முப்பால் என்றே வழங்கப்படுகிறது. திருக்குறளில் பாலின் உட்பிரிவாகிய இயல்கள் பலப்பல மாறுதல்களை அடைந்திருக்கின்றன. அம்மாறுதல்களைத் திருக்குறள் உரைகளில் காணலாம். இன்று, பொருளதிகாரத்தில் ஒன்பதாவது இயலாக உள்ள மரபியல், செய்யுள் இயலுக்கு முன் அமைந்து, செய்யுள் இயல் இறுதி இயலாக வழங்கி வந்தது என்பதற்குப் பேராசிரியர் உரை சான்றாக உள்ளது. மேலும் தொல்காப்பியத்தின் உட்பிரிவாகிய அதிகாரம், படலம் என்றும் வழங்கி இருக்கிறது என்றும், அதிகாரத்தின் உட்பிரிவாகிய இயலுக்கு ஓத்து என்ற பெயரும் வழங்கியுள்ளது என்றும் பேராசிரியர் உரை நமக்கு அறிவிக்கின்றது. உரையாசிரியர்களால் சுட்டப் பெறும் குறுந்தொகைப் பாடல்கள் சில, இன்று வெளிவந்துள்ள குறுந்தொகையில் இடம் பெறவில்லை. நச்சினார்க்கினியர் குறிஞ்சிக்கலியின் இரண்டாவது பாட்டு உரையில் ‘நன்றே என்னும் குறுந்தொகையும் அது’ என்று கூறுகின்றார். ‘நன்றே’ என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் இன்று கிடைக்கவி்ல்லை. தக்கயாகப் பரணி உரையாசிரியர், “சிலம்பிபொதி செங்காய் - இது குறுந்தொகை” (தக்க-54) என்று கூறுகின்றார். இப்பாடல் மறைந்துவிட்டது. அ,குமார சுவாமிப்பிள்ளை பதிப்பித்த நம்பியகப் பொருள் விளக்கவுரை, பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்ததற்கு உதாரணச் செய்யுளாக, இவளே நின்னல திலளே யாயும் குவளை உண்கண் இவளல திலளே யானும் ஆயிடை யேனே மாமலை நாட மறவா தீமே |