என்பதைக் காட்டி “இது குறுந்தொகைச் செய்யுள்” என்று கூறுகின்றது. இதுவும் குறுந்தொகையில் இடம் பெறவில்லை. பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, இன்னிலையா, கைந்நிலையா என்ற குழப்பம் வந்தபோது, இளம் பூரணர் உரையே ‘கைந்நிலை’ என்பது அகப்பொருள் நூல் என்றும் பழைய நூல் என்றும் அறிவித்து நான்கு செய்யுட்களை மேற்கோளாகக் காட்டி உண்மையை அறிவித்தது. சீவகசிந்தாமணியில் 3145 பாடல்கள் உள்ளன. ஆனால் ‘முந்நீர் வலம்புரி’ என்னும் பாடல் (3143) உரைக் கீழ் நச்சினார்க்கினியார், “தேவர் அருளிச் செய்த செய்யுள் இரண்டாயிரத்து எழுநூறு என்றே கொள்க” என்று கூறுகின்றார். ஏனைய பாடல்கள் (445) கந்தியார் என்னும் பெண் புலவரால் இடையிடையே பாடிச் சேர்க்கப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். அச் செய்யுட்கள் இன்னவை என்று புலப்படவில்லை. எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் கூறும் நன்னூல், ஐந்திலக்கணமும் (பொருள், யாப்பு, அணி) கூறும் பெரு நூலாக இருந்தது என்பதை மயிலை நாதர் உரை அறிவிக்கின்றது. பழந்தமிழ் நூல்களில் பரிபாடலும் பதிற்றுப்பத்தும் குறைந்ததும் சிதைந்தும் கிடைத்துள்ளன. அவற்றிற்குரிய-மறைந்ததாய்க் கருதப்படும் பகுதிக்குரிய பல செய்யுள்களை உதாரணங்களாக எடுத்துக்காட்டி உரையாசிரியர்கள் பேணிக் காத்துத்துள்ளனர். “பரிபாடலின் முதற்பாடல் இளம்பூரணர் உரையினாலும்; பதிற்றுப் பத்துப் பாடல்கள் சில, நச்சினார்க்கினியர் உரையினாலும்; பழமொழியின் முதற்பாடல் மயிலை நாதர் உரையினாலும் கிடைத்துள்ளமை மேற்கோள் ஆட்சியின் பயன் அல்லவா? களவியலில் காணப்பட்ட பாடல்கள் பாண்டிக்கோவையைச் சார்ந்தவை என்பதும்; சிற்றடக்கம் எனவும் சிற்றடகம் எனவும் பிழைபட வழங்கப்பட்டுவந்த நூற்பெயர் சிற்றெட்டகம் எனத் திருத்தமுற்றதும் களவியற் காரிகையின் மேற்கோள் ஆட்சியினால் அல்லவா? தரவு கொச்சகம் முதலிய உறுப்புக்களின் பாகுபாடு அறிய இயலாதவாறு சிதைந்த நிலையில் கிடைத்துள்ள பரிபாடலில் இரு பாடல்களுக்காவது, உறுப்பமைப்புக் கிடைத்தது இளம்பூரணரின் மேற்கோள் ஆட்சியினால் அன்றோ? ‘ஒண்டொடி அரிவை’ என்னும் ஐங்குறு நூற்றுப் பாடலின் (172) ‘உரவுக் கடல் ஒலித் திரை போல’ என்ற திருந்திய பாடத்திற்கு இளம்பூரணரின் மேற்கோள் ஆட்சி |