அல்லவா காரணம்? இவற்றை எல்லாம் மேற்கோள் ஆராய்ச்சியின் பயன்கள் என்னாமல் வேறு எங்ஙனம் குறிப்பிடுவது”* இவையே யன்றி, தகடூர் யாத்திரை குண்டலகேசி வளையாபதி முதலிய இலக்கியங்களிலும், அவிநயம் இந்திரகாவியம் அமுத சாரம் காக்கை பாடினியம் ஆகிய இலக்கணங்களிலும் குறைப்பகுதிகளாவது வெளிவந்திருப்பது மேற்கோள் பாடல்களால் விளைந்த நற்பயன் அல்லவா? கடல்கோளுக்கும், நெருப்புக்கும், நீருக்கும், கறையானுக்கும், கல்லாத மக்களின் பொல்லாத அறியாமைக்கும் இரையாகி, கணக்கற்ற தமிழ் நூல்கள் மறைந்துவிட்டன. அந்நூல்களின் சில பகுதிகளையும், பெயர்களையும் உரையாசிரியர்களே நமக்கு வழங்கிப் பேருதவி புரிந்துள்ளனர். இலக்கணம், இலக்கியம், இசை, நாடகம் ஆகிய பல வேறு துறைகளுக்கு உரிய மறைந்த நூல்கள், உரைகளிலிருந்து திரட்டப் பெற்று ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்ற பெயரில் பயனுள்ள அரிய நூலொன்று வெளியாகியுள்ளது. சேம நிதி ஏட்டில் எழுதாத இலக்கியச் செல்வங்களைக் காத்த பெருமையும் உரையாசிரியர்களுக்கு உண்டு. அவர்கள் தம் காலத்துப் பேச்சுமொழி, வட்டார வழக்கு, மரபுத் தொடர், பழமொழி ஆகியவற்றை அறிந்து, ஏட்டில் எழுதிவைத்து அழியா வாழ்வு நல்கினர். வாய்மொழியாக வந்த சிறந்த தனிப் பாடல்களை-பெரும் புலவர்கள் பாடிய தனியன்களை-திரட்டித் தந்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. நாட்டிலே வழங்கி வந்த கதைகள் சிலவற்றை உரைகளில் தந்தனர். தமிழகப் பழங் கதைகளில் தமிழர் நாகரிகம், நெஞ்சப் பாங்கு, குறிக்கோள் யாவும் அடங்கியுள்ளன. இவற்றிற்கு மேலாக உரையாசிரியர்கள் செய்த பணியொன்று உண்டு. நாட்டுப் பாடல்கள் சிலவற்றை எழுதி வைத்துள்ளனர்; விடுகதைப் பாடல்களைத் தந்துள்ளனர். இவை மிகுதியாக இல்லை என்றாலும், ஆற்றகரையில் ஒதுங்கிக் கிடக்கும் பொன் மணல் போலப் பளிச்சிடுகின்றன. வாய்மொழி இலக்கியத்திற்கு வாழ்வு தந்து போற்றிவந்த உரையாசிரியர்கள் என்றும் போற்றத்தக்கவர்கள். * திருக்குறள் மேற்கோள் விளக்கம் (1970). பக்.64, 65 - டாக்டர் அ. தாமோதரன். |