உரையாசிரியர்கள் தம் காலத்து மக்கள் நிலை, வாழ்க்கை முறை, நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு, அரசியல் போக்கு ஆகியவற்றை ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றனர். தமிழ் நாட்டு வரலாறு எழுதுவோர், பழைய உரைகளின் வாயிலாகக் காலத்தின் குரலைக் கேட்கலாம்; வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். வரலாற்று ஆசிரியர்கள் பழைய உரைகளைச் சிறந்த வரலாற்று மூலங்களாகக் கருதி அவற்றைக் கற்றுத் தெளிந்து, தமிழக வரலாற்றை உருவாக்க வேண்டும். பழைய உரைகள் ஆராய்ச்சி உலகத்தின் திறவுகோல்; இலக்கியம், இலக்கணம் கற்க முயன்று தளர் நடை போடும் மாணாக்கனின் கைகளைப் பற்றி நடத்திச் செல்லும் தந்தை; அறிவு செழிக்குமாறு ஊட்டி வளர்க்கும் தாய்; காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து, விரும்பிய போதெல்லாம் அறிவு புகட்டும் பேராசான். உரையாசிரியர்கள் வாழ்ந்த காலம் பழமையானது. ஆனால், அவர்களிடம் புதிய சிந்தனைகள் தோன்றியுள்ளன. காலத்தின் பிடிப்புக்குள் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாய்ச் சிந்தித்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடம், புறவளர்ச்சிக்குரிய அறிவியல் கருவிகளும் முன்னேற்றத்திற்கு உதவும் புதிய வசதிகளும் இன்றிப் பிற்போக்கில் இருந்தது. ஆனால், அவர்கள் எண்ணமும் எழுத்தும், செயலும் சிந்தனையும் முற்போக்கானவை. இலக்கிய மரபுக்கும் இலக்கண நெறிக்கும் சமயக் கொள்கைக்கும் உட்பட்டு அவர்கள் உரை எழுதினர். ஆனால் சுதந்திரத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் மொழிக் கலையின் முழுமையைக் கண்டு உயர்ந்து சென்றும், கருத்துக் கடலில் மூழ்கியும் திளைத்தவர்கள். ஆனால், சிறிதளவு கற்றவரும் அவர்களிடம் சென்று நெருங்கிப் பழகி உரைகளைப் பயின்று பயன் பெற முடிகின்றது. அவர்கள் பழைய நூல்களுக்கு உரை எழுதி, பழைய மரபை வளர்க்கவும் முன்னோர் கருத்துக்களை வெளிப்படுத்தவும் முயன்று வெற்றி பெற்றனர். ஆனால், தம் காலத்து எண்ணத்தையும் எழுத்தையும் புறக்கணிக்கவில்லை. பலவேறு துறைகளில் அவர்கள் ஆற்றியுள்ள பணிகள், மிக உயர்ந்து விளங்குகின்றன. ஆனால், அவை கருத்துலகிற்குச் சென்று கண்டு மகிழ உதவுகின்ற எளிய படிகளாய் உள்ளன. அவர்கள் உரைநடை கடுமையும் செறிவும் உடையது. ஆனால் அதுதான் தமிழ் மொழியின் உயர்வுக்கும் சிறப்புக்கும் காரணமாய் உள்ளது. கல்லாதேன் ஆனாலும் கற்றுணர்ந்த மெய்யடியார் சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே! - தாயுமானவர் (பராபரக். 383) |