பக்கம் எண் :

109அறிமுகம்

5. உரையும் உரைநடையும்

    ‘தமிழ் உரைநடை வரலாறு’ தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது. பலநூறு
ஆண்டுகளுக்கு முன்னிருந்தே திட்ப நுட்பம் வாய்ந்த செவ்விய உரை நடை,
தமிழ் மொழியில் வளர்ந்து பெருகிச் சிறப்பெய்தியுள்ளது. உரைநடையை
வளர்த்துச் செப்பனிட்டுப் போற்றி வந்தது உரையாசிரியர்கள் செய்த ஒப்பற்ற
பணியாகும். தமிழ் மொழியில் பல வேறு காலங்களி்ல் வழங்கி வந்த
உரைநடையின் சிறப்பியல்புகளை அறிந்துகொள்ள, உரையாசிரியர்களின்
உரை நடையை நோக்குதல் வேண்டும்.

     செய்யுள் நூலுக்கு இடையிடையே எழுதிய உரைகளே அல்லாமல்,
தனியாக உரைநடையில் எழுந்த நூல்கள் சில உலவின. ஸ்ரீ புராணம்,
குருபரம்பரா பிரபாவம் போன்றவை மணிப்பிரவாள நடையில் எழுந்த
உரைநடை நூல்களாகும். உரையாசிரியர்கள் முயன்றிருந்தால் தனியாக
உரைநடை நூல்கள் பல எழுதியிருக்க முடியும். அவர்களிடம் அதற்கு
வேண்டிய தகுதிகள் யாவும் இருந்தன.

     ‘அகவற்பா, பழந்தமிழர் கொண்ட ஒருவித உரைநடை’ என்பது,
தமிழ்ப்பெரியார் திரு.வி.க. கருத்தாகும்.* இக்கருத்தை வலியுறுத்தும் வகையில்
சங்க இலக்கியத்தில் உள்ள பல அகவற்பாடல்கள், உரைநடை போன்றே
உள்ளன. அப்பாடல்களில் உள்ள ஏகாரம், மற்று என்ற அசைச் சொல்
முதலியவற்றை நீக்கி விட்டுச் சீர் பிரிக்காமல் எழுதினால், ‘அகவற்
பாடல்கள், உரைநடையே’ என்பது விளங்கும்.

     குறுந்தொகைப் பாட்டில் உள்ள,

     யானே ஈண்டை யேனே; என் நலனே
     ஆனா நோயொடு கான லஃதே
     துறைவன் தம்மூ ரானே
     மறைஅல ராகி மன்றத் தஃதே
                                              (குறுந்-97)

என்ற பாடலில் உள்ள ஏகாரங்கள் ஆறினையும் நீக்கிவிட்டு,

     “யான் ஈண்டையேன்; என் நலன் ஆனா நோயொடு கானலஃது;
துறைவன் தம் ஊரான்; மறை அலராகி மன்றத்தஃது” என்று எழுதினால்,
உரைநடையாகவே அப்பாடல் அமைந்து விடுகின்றது. இத்தகைய எடுத்துக்
காட்டுகள் பல தரலாம்.


*பொருளும் அருளும் - முன்னுரை (1951)