பக்கம் எண் :

உரையாசிரியர்கள்110

     சிலப்பதிகாரத்தில் உள்ள உரை நடையும், இறையனார் களவியல்
உரையும் மற்ற உரையாசிரியர்களின் உரையும் எதுகை மோனைகள் சிறப்புற
அமையப் பெற்று ஓசைச் சிறப்பு வாய்ந்த இனிய அகவற் பாக்களாக
அமையும் இயல்புடையவை. இதற்குக் கணக்கற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன.

     இறையனார் களவியலில், “இந்நூல் செய்தார் யாரோ எனின், மால்வரை
புரையும் மாடக் கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக்
குறங்கண்ணியாக வுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்” என்ற
பகுதியில், எதுகை மோனைகள் அமைந்து அகவல் ஓசை வாய்ந்த அகவற்பா
உள்ளது. இப்பகுதியை எதுகை மோனைகளின் இயையு நோக்கி அடிகளை
அமைத்து, வேற்றுமை உருபுகளை நீக்கி,

    மால்வரை புரையும் மாடக் கூடல்
    ஆல வாயிற் பால்புரை பசுங்கதிர்க்
    குழவித் திங்களைக் குறுங்க(ண்)ணியாக (உடைய)
    அழலவிர் சோதி அருமறைக் கடவுள்

என்று ஓர் அகவற் பாடலை அமைக்கலாம்.

     இன்னும், மற்ற உரைகளிலும் அகவலாய் அமையத்தக்க இடங்கள் பல
உள்ளன.

     செய்யுளுக்குரிய சிறப்புகள் யாவும் உரைநடைக்கு உண்டு. வல்லவன்
கைத்திறனால் உரைநடையும் கவிதை போல இனிக்கின்றது; உள்ளத்தைக்
கவர்கிறது; உணர்ச்சி ஊட்டுகிறது. கவிஞர்களைப் போலவே உரைநடை
ஆசிரியர்களும் மக்களிடம் பெருமதிப்புப் பெறுகின்றனர். செல்வக் கேசவராய
முதலியார், உரைநடை ஆசிரியரின் சிறப்பைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

     “கவிகள் போலவே கட்டுரை எழுதுவோரும், கருவிலே திருவுடையவர்.
நாநலமுடைமை பிறவிக் குணங்களில் ஒன்று. ‘தெய்வப் புலவனுக்கு நா
உணரும்; சித்திர ஓடாவிற்குக் கை உணரும்’ என்பது கவி நடைக்கு
மாத்திரமேயன்றிக் கட்டுரை நடைக்கும் பொருந்துவது என்பது, சிறந்த வசன
நடையின் திறங்களைக் கூர்ந்து உய்த்து உணர்ந்தவர் கண்டபடி. வசனத்தில்,
உரிய சொற்களாகிய நன்மொழி புணர்த்தியும், நவின்றோர்க்கு இனிமை
தருவதான ஓசையூட்டியும் செவ்வி செய்த நடையாகிய நவநீதம் தெய்வப்
புலவர் எனப்படும் வாக்கிகட்கே கைவல்யம்”
1

     இப்பகுதியைப் படிக்கும்போது ஆர்.எல்.ஸ்டீவன்சன் என்னும்
ஆங்கிலநாட்டு அறிஞர், உரை நடை எழுதுபவர்க்குக்


     1. தமிழ் வியாசங்கள் - பக்கம் 120.