கிழக்கிந்தியக் கம்பெனி பற்றிக் கூறுங்கால்,
சாற்றொணா இங்கிரீ சென்னுஞ் சார்புள்ளார்
ஆற்றலேசகர் கும்பினி அரசென் றோதுவார்.
என்கின்றார், நமச்சிவாயப்புலவர்.
'கலியுகப் பெருங் காவியம்' உயர்தரமான கவிதை இலக்கியம் என்று சொல்வதற்கில்லை. ஆயினும், கட்டபொம்மனின் வீர வரலாற்றைச் சுவைபடக்
கூறும் சிறந்த நூலாகும்.
கட்டபொம்மன் கதைப்பாடல்
'கட்டபொம்மன் கதைப்பாடல்' என்னும் மற்றொரு கவிதை இலக்கியம்
திரு.நா.வானமாமலை அவர்களால் வெளியிடப் பட்டுள்ளது. இதன் ஆசிரியர்
பெயர் தெரியவில்லை. இதில்,
எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எழுகடலும்
வெட்டிச் சயம் கொண்ட கட்டபொம் மேந்திரன் பேரு சொன்னால்,
காடை பதுங்கும் கருவாலி வட்ட மிட்டாடி வரும்
சிட்டில் பறக்கும் அய்யோ பாஞ்சால நாடு தெருவெங்குமே.!
என்று பாஞ்சாலங்குறிச்சி வருணிக்கப்படுகிறது.
கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவன் போர்க் களம்புகப்
புறப்பட்டபோது அவன் மனைவி வெள்ளையம்மாள் தான் கண்ட கனவைத்
தன் கணவனிடம் கூறும் பாடல் வருமாறு: