பக்கம் எண் :

244என் சரித்திரம்

அவ்விடங்கள் பிறகு தல விசேஷங்களால் ஜனங்களுடைய அன்புக்கு
உரியனவாக இருந்தன. இப்போது அந்த மதிப்பும் குறைந்து விட்டது.

நாங்கள் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில்
தங்கினோம். அவர் அந்த ஊரில் ஒரு ஜமீன்தாரைப் போலவே வாழ்ந்து
வந்தார். பிள்ளையவர்களை அவர் மிக்க அன்போடு உபசாரம் செய்து
பாதுகாத்துவந்தார். அக்கிரகாரத்தில் அப்பாத்துரை ஐயர் என்பவர் வீட்டில்
நான் ஆகாரம் செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

விலகிய நந்தி

பட்டீச்சுரம் சென்ற முதல் நாள் மாலையில் பிள்ளையவர்கள் வெளியே
உலாத்திவரப் புறப்பட்டார். நான் உடன் சென்றேன். அவ்வூருக்கு அருகிலுள்ள
திருமலைராயனாற்றிற்கு அழைத்துச் சென்றார். போகும்போது பட்டீச்சுர
ஆலயத்தின் வழியே சென்றோம். அவ்வாலயத்தில் நந்திதேவர்
சந்நிதியைவிட்டு மிக விலகியிருப்பதைக் கண்டேன். நந்தனார் சரித்திரத்தைப்
படித்து ஊறிய எனக்கு அவர் சிவபெருமானைத் தரிசிக்கும் பொருட்டுத்
திருப்புன்கூரில் நந்தி விலகினாரென்ற செய்தி நினைவுக்கு வந்தது. “இங்கே
எந்த அன்பருக்காக விலகினாரோ!” என்று எண்ணியபோது என் சந்தேகத்தை
என் முகக் குறிப்பினால் உணர்ந்த ஆசிரியர்’ “திருச்சத்தி முற்றத்திலிருந்து
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமான் அருளிய முத்துப் பந்தரின்
கீழே இவ்வழியாகத் தரிசனத்துக்கு எழுந்தருளினார். அவர் முத்துப் பந்தரின்
கீழே வரும் கோலத்தைத் தாம் பார்த்து மகிழ்வதற்காக இக்கோயிலில்
எழுந்தருளியுள்ள தேனுபுரீசுவரர் நந்தியை விலகும்படி கட்டளையிட்டனராம்.
அதனால்தான் விலகியிருக்கிறார்” என்றார்.

மேலைப் பழையாறை

அப்பால் திருமலைராயனாற்றிற்கு நாங்கள் சென்று அனுஷ்டானங்களை
முடித்துக்கொண்டு மீண்டோம். அந்த ஆற்றிற்குத் தெற்கே மேலைப்
பழையாறை என்னும் ஊர் இருக்கிறது. அதன்பெரும் பகுதி ஆறுமுகத்தா
பிள்ளைக்குச் சொந்தமாக இருந்தது. இயற்கை வளங்கள் நிறைந்த அவ்வூரில்,
தென்னை, மா, பலா, கமுகு முதலிய மரங்கள் அடர்ந்த ஒரு தோட்டத்தின்
நடுவில் ஆறுமுகத்தா பிள்ளை அழகிய கட்டிடம் ஒன்றைக் கட்டியிருந்தார்.
வெயில் வேளைகளில் அங்கே சென்று தங்கினால் வெயிலின் வெம்மை
சிறிதேனும் தெரியாது. பிள்ளையவர்கள் அடிக்கடி அவ்விடத்திற்சென்று தங்கிப்