பக்கம் எண் :

சிலப்பதிகாரப் பதிப்பு 707

ஏட்டுச் சுவடிகளின் நிலையைப் புலப்படுத்த வேண்டுமென்பது என்
விருப்பம். ஆகவே முகவுரையில், “மேற்கூறிய பழைய பிரதிகள் பல, இனி
வழுப்பட வேண்டுமென்பதற்கு இடமில்லாமற் பிழை பொதிந்து, அநேக
வருடங்களாகத் தம்மைப் படிப்போரும், படிப் பிப்போரும் இல்லை
என்பதையும், நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே
விரதமாகக் கொண்ட சில புண்ணியசாலி களாலேயே தாம் உருக்
கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின. ஒன்றோடொன்றொவ்வாது பிறழ்ந்து
குறைவுற்றுப் பழுதுபட்டுப் பொருட்டொடர்பின்றிக் கிடந்த இப்பிரதிகளைப்
பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ள முருகும்” என்று எழுதினேன்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தை அச்சிடுவதற்கு ஏற்ற நிலையில் அமைத்து
நிறைவேறும் தருணத்தில் கொழும்பு பொ. குமாரசுவாமி முதலியாருக்கு
அச்செய்தியைத் தெரிவித்தேன். சிலப்பதிகாரப் பதிப்புச் செலவை அவர்
ஏற்றுக் கொள்வதாக முன்னர் எழுதியிருந்ததோடு அடிக்கடி அந்நூலைப்பற்றி
விசாரித்து வந்தனர். அவர் தாம் ரூ. 300 அனுப்புவதாகத் தெரிவித்தார்.
சிலப்பதிகாரப் பதிப்பை நிறைவேற்றுவதற்கு அத்தொகை போதா விட்டாலும்
ஏற்றுக்கொண்டேன்.

பதிப்பு ஆரம்பம்

1891-ம் டு ஜூன் மீ கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்று
சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினேன். திராவிட ரத்நாகர
அச்சுக்கூடத்தார் கேட்ட அச்சுக்கூலி அதிகமாகத் தோன்றியமையால்
வெள்ளைய நாடார் ஜூபிலி அச்சுக் கூடத்தில் அச்சிட ஏற்பாடு செய்தேன்.
பூந்தமல்லி ஹைரோடில் உள்ள அச்சுக்கூடத் தலைவராகிய தவசி முத்துநாடார்
பங்களாவில் முதலில் தங்கினேன். பிறகு திவான் ராமையங்கார் தோட்டத்தில்
ஜாகை வைத்துக்கொண்டேன். ராமையங்கார் மாப்பிள்ளையும் என்
மாணாக்கருமாகிய வக்கீல் கே. ராஜகோபாலாசாரியரென்பவர் எனக்கு இடம்
கொடுத்து வேண்டிய சௌகரியங்களையும் செய்வித்தார். திருமானூர்க்
கிருஷ்ணையர் உடனிருந்து வேலைகளைக் கவனித்து வந்தார்.

சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரை மிகவும் சிதைந்திருந்தமை யால்
அதனைப் பதிப்பிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
‘சிலப்பதிகாரம் நிறைவேறட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒரு
முடிவு செய்யாமல் நிறுத்தினேன்.