பக்கம் எண் :

708என் சரித்திரம்

சென்னையில் தங்கிய அக்காலத்தில் அந்நகரத்திலுள்ள பல
வித்துவான்கள் வீட்டுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினேன். சரவணப்
பெருமாளையருடைய கொள் பேரராகிய குருசாமி ஐயரென்பவர் வீட்டில்
சிலப்பதிகார அரும்பத உரையில் பத்து ஒற்றையேடுகள் கிடைத்தன.
அவற்றைப் பெற்று என்னிடமுள்ள ஏட்டோடு ஒப்பிட்டுப் பார்த்துத்
திருத்தங்களைச் செய்து கொண்டேன். மற்றப் பகுதிகள் எங்கே
போயினவென்று குருசாமி ஐயரைக் கேட்டபோது அவை போனவிடம் தமக்குத்
தெரியவில்லை என்று சொல்லி விட்டார்.

இரு விருந்து

சிலப்பதிகாரப் பதிப்பு வேகமாகவே நடைபெற்று வந்தது.
அச்சுக்கூடத்துக்கும் சாப்பாட்டு விடுதிக்கும் இடையே இரண்டு மைல் தூரம்
இருக்கும், காலையில் 10 மணிக்கு ஆகாரம் செய்து விட்டுச் சென்றால் இரவு
வந்து தான் உணவு கொள்வேன். ஒருநாள் இரவு 8 மணிக்கு உணவு
கொள்ளும் விடுதியில் வந்து சாப்பிடும் போது ஆகாரம் நன்றாயிராமையால்
தடுமாறினேன். நாற்றமுள்ள நெய்யும் உப்புக்காரம் இல்லாத குழம்பும் வேகாத
அன்னமும் குடலைக் குமட்டிக் கொண்டு வந்தன. அப்போது அவ்விடுதிக்கு
வடக்கேயுள்ள ஹநுமார் கோயிலில் இராமர் சந்நிதியில் சிலர் திவ்யப் பிரபந்த
ஸேவை செய்து கொண்டிருந்தனர். அது காதில் விழுந்தது. உற்றுக்
கவனிக்கையில் பெருமாள் திருமொழியென்று தெரிந்தது. உடனே எழுந்து கை
கழுவிக்கொண்டு அங்கே சென்றேன்.

அன்று புனர்வசு நக்ஷத்திரம். ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் பலர்
குலசேகரப் பெருமாள் வாக்கிலிருந்து தசரதன் புலம்பலென்னும் பகுதியிலுள்ள
பாசுரங்களை நிறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தனர். சிலர் எனக்குப்
பழக்கமானவர்கள். நான் போனவுடன் எனக்கு இடம் கொடுத்துப் பின்னும்
மெல்லச் சொல்லலாயினர். அந்தப் பாசுரங் களைக் காது குளிரக் கேட்டேன்;
பசியை மறந்தேன். உடலிளைப்புக் கூடத்தீர்ந்தது போலத் தோற்றியது. இந்தச்
செவி விருந்தோடு நிற்கவில்லை. அதன் பிறகு, நிவேதனமான
சித்திரான்னங்களும் கிடைத்தன. இரட்டை விருந்து பெற்று மகிழ்ந்தேன்.

விடுமுறை நாட்கள் தீர்ந்து விட்டமையால் பதிப்பு வேலையைத்
திருமானூர்க் கிருஷ்ணையரைக் கவனித்துக் கொள்ளும்படியும் புரூபை எனக்கு
அனுப்பும்படியும் ஏற்பாடு செய்துவிட்டுக் கும்பகோணத்திற்கு வந்தேன்.