Untitled Document அவனுடைய குணங்களை அறிவது எப்படி?’ என்பதே என் மனத்தைச் சதா அலைத்துக் கொண்டிருந்தது. மறுநாள் லவேட்டரின் புத்தகத்தை வாங்கினேன். ஷெம்மல் பென்னிக்கின் புத்தகம் கடையில் கிடைக்கவில்லை. லவேட்டரின் புத்தகத்தை படித்தேன் ‘ஈக்விடி’யைப் பற்றிய ஸ்னெல்லின் புத்தகத்தையும் விட இது அதிக கஷ்டமானதாக இருந்ததோடு படிப்பதற்கும் ரசமாக இல்லை. ஷேக்ஸ்பியரின் முக பாவத்தைப் பற்றியும் படித்தேன்.
ஆனால், லண்டன் தெருக்களில் அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்களின் முகபாவத்தைக் கொண்டு அவர்களைப் புரிந்துகொண்டுவிடும் ஆற்றல் எனக்கு ஏற்படவில்லை.
லவேட்டரின் புத்தகம், எனக்குப் புதிய அறிவு எதையும் புகட்டிவிடவில்லை.ஸ்ரீ பின்கட்டின் புத்திமதிகள் எனக்கு நேரடியான உதவி எதையும் அளித்துவிடவில்லை. ஆனால், அவருடைய அன்பு, எனக்குத் தைரியத்தை ஊட்டியது. அவரது புன்னகைபூத்த கபடமற்ற முகம், என் நினைவில் பதிந்துவிட்டது. ‘வெற்றிகரமான ஒரு வக்கீல் ஆவதற்குப் பிரோஸ்ஷா மேத்தாவுக்குள்ள அறிவுக்கூர்மையும், ஞாபக சக்தியும், ஆற்றலும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் போதும்’ என்று அவர் கூறிய புத்திமதியில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கடைசியில் கூறப்பட்ட இவ்விரு குணங்களும் என்னிடம் ஓரளவுக்கு இருந்ததால் நான் ஒருவாறு தைரியம் கொண்டேன்.
கேயியும் மாலிஸனும் சிப்பாய்க் கலகத்தைக் குறித்து எழுதிய புத்தகத்தை இங்கிலாந்தில் இருந்தபோது நான் படிக்க முடியவில்லை. ஆனால், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே படித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்ததால் அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் படித்தேன்.
இவ்விதமான மனச்சோர்வுடனும், அற்ப சொற்பமான நம்பிக்கையுடனும், எஸ். எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் நான் பம்பாய் வந்து இறங்கினேன். துறைமுகத்தில் கடல், கொந்தளிப்பாக இருந்தது. ஒரு நீராவிப் படகு மூலமே கப்பலிலிருந்து கரைசேர்ந்தேன். | |
|
|