பக்கம் எண் :

முதல் அதிர்சி117

Untitled Document
பிடிக்கவில்லை.  அவர் சொன்னதாவது:   “உனக்குக் கத்தியவாரைப்
பற்றி ஒன்றுமே தெரியாது.      உலக       அனுபவமும் உனக்குப்
போதவில்லை. செல்வாக்கு   ஒன்றுதான் இங்கே முக்கியம். உனக்குத்
தெரிந்தவரான ஓர் அதிகாரியிடம்   என்னைக் குறித்து நீ ஒரு நல்ல
வார்த்தை சொல்ல       நிச்சயம் முடியும் என்று   இருக்கும்போது,
சகோதரனாகிய நீ, உன் கடமையைத் தட்டிக்     கழிப்பது சரியல்ல”.

     அவருக்கு நான்     மறுத்துக் கூற முடியாது. அதனால்,  என்
விருப்பத்திற்கு மாறாகவே அந்த அதிகாரியிடம் போனேன். அவரிடம்
போவதற்கு எனக்கு எந்தவிதமான     உரிமையும் இல்லை என்பதை
அறிவேன். என்னுடைய சுயமதிப்பையும் விட்டுத்தான் நான் அவரிடம்
போகிறேன் என்பதையும்       நான் நன்றாக அறிந்தே இருந்தேன்.
ஆயினும் பார்க்கவேண்டும் என்று கோரி,    அனுமதியும் பெற்றேன்.
எங்களுக்குள்     இருந்த       பழைய பழக்கத்தையும் அவருக்கு
நினைவூட்டினேன்.    ஆனால்,  இங்கிலாந்திற்கும் கத்தியவாருக்கும்
வித்தியாசம் அதிகம் என்பதை உடனே கண்டேன்.    ஓர் அதிகாரி,
ஓய்வு பெற்றிருக்கும்போது     ஒரு மனிதராகவும்  உத்தியோகத்தில்
அமர்ந்திருக்கும்போது       வேறு மனிதராகவும்   ஆகிவிடுகிறார்
என்பதையும் அறிந்தேன். என்னைத் தமக்குத் தெரியும்   என்பதை
ராஜீய ஏஜெண்டு     ஒப்புக்கொண்டார். ஆனால், அப் பழக்கத்தை
நினைவூட்டியதால் அவருடைய       கடுகடுப்பு அதிகமானதாகவே
தெரிந்தது. ‘அந்தப் பழக்கத்தைத் தவறான வழியில்  உபயோகித்துக்
கொள்வதற்காக நீர்       இங்கே வரவில்லையல்லவா?’  என்பதே
அவருடைய கடுகடுப்புக்குப்      பொருள்போல் தோன்றியது. அது
அவர் முகத்திலும் பிரதிபலித்தது. என்றாலும் நான் வந்த காரியத்தை
அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் துரை   பொறுமையை
இழந்துவிட்டார். “உமது சகோதரர்   சூழ்ச்சிக்காரர். அவரைப் பற்றி
உம்மிடமிருந்து எதையும்     கேட்க நான் விரும்பவில்லை. எனக்கு
நேரமும் கிடையாது. ஏதாவது  சொல்லிக்கொள்ள வேண்டும் என்று
உம் சகோதரர்       விரும்பினால் முறைப்படி      அதை மனுச்
செய்துகொள்ளட்டும்”      என்றார்.   இந்தப் பதில் போதுமானது.
இப்படிப்பட்ட பதிலே எனக்குச் சரியான தாகவும்     இருக்கலாம்.
ஆனால், சுயநலம் ஒருவனைக் குருடாக்கி விடுகிறது. நான்,   என்
கதையை    சொல்லிக்கொண்டே      போனேன்.  துரை எழுந்து
இப்பொழுது நீர் போய்விட வேண்டும் என்றார்.

     “தயவு செய்து நான் சொல்லுவதை முழுவதும்  கேளுங்கள்”
என்றேன். இப்படிச் சொன்னதும் அவருக்குக் கோபம்   அதிகமாகி
விட்டது. அவர் தமது சேவகனைக்   கூப்பிட்டு என்னை வெளியே
அனுப்பும்படி சொன்னார். அப்பொழுதும் நான்  தயங்கிக்கொண்டே
நின்றேன். சேவகன் உள்ளே வந்து,     என் தோளில் கைபோட்டு
என்னை வெளியே தள்ளிவிட்டான்.