பக்கம் எண் :

120சத்திய சோதனை

Untitled Document
அதிகாரத்திற்கு அதிகாரிகள் சூழ்ச்சிகளில்    இறங்குவதும்  அங்கே
சர்வ சாதாரணம். சமஸ்தானாதிபதிகளோ,    எப்பொழுதுமே  பிறரை
நம்பியிருக்க     வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே,  இச்சகம்
பேசுகிறவர்கள்   சொல்லுவனவற்றிற்கெல்லாம்   சமஸ்தானாதிபதிகள்
செவி சாய்த்து வந்தனர். துரையின் சேவகனைக்     கூடச் சரிகட்டி
வைத்துக்  கொள்ள     வேண்டியிருந்தது.   துரையின் சிரஸ்தாரே
துரைக்குக்     கண்களாகவும்,  காதுகளாகவும்,   மொழிபெயர்த்துச்
சொல்லுபவராகவும் இருந்ததால், அவர்,       தம் எஜமானனைவிட
ஒருபடி     மேலானவராகவே இருந்தார்.   சிரஸ்தார் வைத்ததுதான்
சட்டம்.      அவருடைய வருமானம்   துரையின் வருமானத்திற்கும்
அதிகம் என்பது        பிரபலமான   விஷயம்.  இது ஒரு வேளை
மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகவும்   இருக்கலாம். என்றாலும் அவர்,
தமது           சம்பளத்திற்கு  மிஞ்சிய ஆடம்பர  வாழ்க்கையை
நடத்திக்கொண்டிருந்தார்.

     இந்தச் சூழ்நிலை, விஷமமானது என்று எனக்குத் தோன்றிற்று.
இதனால் பாதிக்கப்படாமல் அங்கே      எப்படி இருப்பது என்பதே
எனக்குத் தீராப் பிரச்சனையாயிற்று.

     நான் முற்றும் மனச் சோர்வை அடைந்துவிட்டேன்.இதை என்
சகோதரர் தெளிவாக     அறிந்துகொண்டார். எனக்கு ஏதாவது ஓர்
உத்தியோகம் கிடைத்துவிட்டால்,இந்தச் சூழ்ச்சிச் சூழ்நிலையிலிருந்து
நான் விடுதலை பெற்றுவிடுவேன் என்பதை    நாங்கள் இருவருமே
உணர்ந்தோம்.     ஆனால்,    சூழ்ச்சியையும்     தந்திரத்தையும்
கையாளாமல் ஒரு  மந்திரி வேலையோ,   நீதிபதி  உத்தியோகமோ
கிடைப்பது முடியாத காரியம். துரையுடன் ஏற்பட்ட சச்சரவு, எனது
தொழிலை     நடத்திக்கொண்டு போவதற்கே இடையூறாக நின்றது.

     அச்சமயம் போர்பந்தர்,     பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த
அதிகாரி ஒருவரின்   நிர்வாகத்தில் இருந்தது.  மன்னருக்கு அதிக
அதிகாரங்கள் கிடைக்கும்படி       செய்வது சம்பந்தமாக அங்கே
எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது. விவசாயிகளிடமிருந்து நிலத்
தீர்வை அதிகப்படியாக வசூலிக்கப்பட்டு வந்தது   சம்பந்தமாகவும்
நான் அந்த நிர்வாக அதிகாரியைப்     பார்க்க வேண்டியிருந்தது.
அந்த அதிகாரி ஓர் இந்தியராக இருந்த போதிலும் அகம்பாவத்தில்
துரையையும்          மிஞ்சியவராக  இருக்கக் கண்டேன். அவர்
திறமைசாலியே. ஆனால், அவருடைய திறமையினால் விவசாயிகள்
எந்த நன்மையையும் அடைந்துவிட்டதாகத்  தெரியவில்லை. ராணா
மேற்கொண்டு சில அதிகாரங்களைப் பெறும்படி   செய்வதில் நான்
வெற்றி பெற்றேன். ஆனால், விவசாயிகளுக்கோ     எவ்விதமான
கஷ்ட நிவாரணமும் ஏற்படவில்லை.  அவர்கள் விஷயம் இன்னது
என்பதைக்கூட அந்த அதிகாரி சரிவரக் கவனிக்கவில்லை என்றே