பக்கம் எண் :

பல மதங்களைக் குறித்து ஆராய்சி 191

Untitled Document
22. பல மதங்களைக் குறித்து ஆராய்ச்சி

     இந்திய     சமூகத்தின் சேவையிலேயே  நான் முற்றும் மூழ்கி
இருந்தேன்           என்றால்,  அதற்கு    முக்கியமான காரணம்,
ஆத்மானுபூதியைப் பெற வேண்டும் என்பதில் நான்    கொண்டிருந்த
ஆர்வம் தான்.  சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும்
என்பதை அறிந்தேன். ஆகையால், சேவையையே என்னுடைய மதம்
ஆக்கிக் கொண்டேன்.       என்  அளவில் சேவையென்றால் அது
இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. ஏனெனில்  அது தேடாமலேயே
எனக்குக்      கிட்டியதோடு,   அதற்கான மன இசைவும் என்னிடம்
இருந்தது.    பிரயாணம்     செய்ய வேண்டும்    என்பதற்காகவும்,
கத்தியவாரின்     சூழ்ச்சிகளிலிருந்து    தப்புவதற்காகவும், எனக்குப்
பிழைப்பைத்            தேடிக் கொள்ளுவதற்காகவுமே,      நான்
தென்னாப்பிரிக்காவுக்குச்     சென்றேன்.   ஆனால் நான் முன்னால்
கூறியதைப் போல், கடவுளைத் தேடுவதில் நான் ஈடுபட்டிருப்பதையும்
ஆத்ம ஞானமடையும்  முயற்சியில் முனைந்திருப்பதையும் கண்டேன்.

     எனக்கு இருந்த   அறிவுப் பசியைக்     கிறிஸ்துவ நண்பர்கள்
இன்னும்      அதிகக்   கடுமையானதாக்கிவிட்டார்கள். அப் பசியோ
தணியாப் பசியாகி விட்டது.   நான்    அசிரத்தையாக   இருந்துவிட
விரும்பினாலும்    அவர்கள் என்னைச் சும்மா விடவில்லை. டர்பனில்
உள்ள   தென்னாப்பிரிக்கப்    பொது மிஷினின்    தலைவரான ஸ்ரீ
ஸ்பென்ஸர் வால்டன்           என்னைக் கண்டு கொண்டார். நான்
அவருடைய    குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாகவே ஆகிவிட்டேன்.
பிரிட்டோரியாவில்    கிறிஸ்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பே,
இப்பழக்கத்திற்குக்   காரணமாக இருந்தது      என்பதைச் சொல்லத்
தேவையில்லை.   ஸ்ரீ வால்டனின் போக்கே அலாதியானது. கிறிஸ்துவ
சமயத்தில் சேர்ந்து விடுமாறு       எப்பொழுதாவது அவர் என்னை
அழைத்ததாக    எனக்கு   நினைவேயில்லை. ஆனால், அவர் தமது
வாழ்க்கையைத் திறந்த புத்தகம்போல் என்  முன்பு வைத்து விட்டார்.
அவருடைய செயல்கள்     யாவற்றையும் நான் காணும்படி செய்தார்.
ஸ்ரீமதி வால்டன்,    கண்ணியமுள்ள,   திறமைசாலியான பெண்மணி.
இத்தம்பதிகளின்     போக்கு     எனக்கு மிகவும்   பிடித்திருந்தது.
எங்களுக்குள்      இருந்த   அடிப்படையான பேதங்களை நாங்கள்
அறிவோம்.     எவ்வளவுதான் விவாதித்தாலும்   அந்தப் பேதங்கள்
மறையமாட்டா.   என்றாலும்,   சகிப்புத் தன்மை, தாராளம், உண்மை
ஆகியவை இருக்குமிடத்தில் பேதங்களும் பயன் அளிப்பவையாகவே
உள்ளன. வால்டன் தம்பதிகளின் அடக்கம், விடாமுயற்சி, உழைப்பில்
ஈடுபாடு ஆகியவை     எனக்குப் பிடித்திருந்தன. நாங்கள் அடிக்கடி
சந்தித்து வந்தோம்.