பக்கம் எண் :

192சத்திய சோதனை

Untitled Document
     இந்த நட்பு எனக்குச் சமய விஷயங்களில் தொடர்ந்து  சிரத்தை
இருந்து       வரும்படி செய்தது.   சமய சம்பந்தமான  நூல்களைப்
படிப்பதற்குப்     பிரிட்டோரியாவில் எனக்கு இருந்த ஓய்வு  இங்கே
கிடைப்பதற்குச் சாத்தியமில்லை.    என்றாலும், எனக்குக்  கிடைக்கும்
கொஞ்ச ஓய்வு நேரத்தையும் நல்வழியில் பயன்படுத்தி வந்தேன். சமய
சம்பந்தமாக       நான் தொடர்ந்து   கடிதப் போக்குவரத்து நடத்தி
வந்தேன். ராய்ச்சந்திரபாய் எனக்கு வழிகாட்டி வந்தார். நர்மதா சங்கர்
எழுதிய, ‘தரும விசாரணை’ என்ற நூலை      ஒரு நண்பர் எனக்கு
அனுப்பினார். அதன் முன்னுரை அதிக உதவியாக இருந்தது. இக்கவி,
ஆரம்பத்தில் நடத்தி வந்த துன்மார்க்க வாழ்க்கையைக் குறித்து நான்
கேள்விப்பட்டிருக்கிறேன்.   சமய நூல்களின் ஆராய்ச்சியினால், தமது
வாழ்க்கையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களைக் குறித்து, அவர்
முன்னுரையில் விவரித்திருந்தது என் மனத்தைக் கவர்ந்தது.  அந்நூல்
எனக்குப் பிரியமானதாக இருந்ததால்  ஓர் எழுத்து விடாமல் அதைக்
கவனமாகப்     படித்தேன்.  மாக்ஸ் முல்லர் எழுதிய, ‘இந்தியா-அது
நமக்கு என்ன போதிக்க முடியும்?’ என்ற   நூலையும் சிரத்தையுடன்
படித்தேன்.   பிரம்மஞான   சங்கத்தினர்         வெளியிட்டிருந்த
உபநிடதங்களின் மொழி பெயர்ப்பையும் படித்தேன்.   இவைகளினால்
எல்லாம் ஹிந்து மதத்தினிடம்  எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது.
அதிலிருந்த அழகுகளையும் அதிகமாக உணரலானேன்.   என்றாலும்,
இதனால் மற்ற மதங்களின் மீது    நான் துவேஷம் கொள்ளவில்லை.
வாஷிங்டன் இர்விங் எழுதிய, ‘முகமதுவும்   அவருடைய சீடர்களும்’
என்ற      புத்தகத்தையும் படித்தேன்.  முகம்மது நபியைக் குறித்துக்
கார்லைல் எழுதிய புகழுரைகளையும் படித்தேன். இந் நூல்களெல்லாம்
முகம்மதுவிடம்    நான்    கொண்டிருந்த        மதிப்பை மேலும்
அதிகப்படுத்தின. ‘ஜாரதூஷ்டிரரின் திருவாக்குகள்’   என்ற நூலையும்
படித்தேன்.

     இவ்விதம்   பல   சமயங்களையும்  பற்றிய   அறிவு எனக்கு
அதிகமாயிற்று.   இந்த ஆராய்ச்சி, என்   ஆன்ம பரிசோதனையை
ஊக்குவித்தது.  நான் படிப்பவைகளில்  எவையெவை சிறந்தவைகள்
என எனக்குத்   தோன்றுகின்றனவோ,  அவற்றை அனுஷ்டானத்தில்
கொண்டு வரும் பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. இவ்விதம் ஹிந்து
நூல்களில்   யோகாப்பியாசத்தைக்    குறித்து நான் படித்து, புரிந்து
கொண்ட     மட்டில்  யோக சாதன முறைகள் சிலவற்றைச் சாதகம்
செய்யவும் முயன்றேன். ஆனால், இதில் நான் வெகுதூரம் முன்னேற
முடியவில்லை. நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, ஒரு நிபுணரின்
உதவியைக் கொண்டு    அதைப் பின்பற்றுவதென்று தீர்மானித்தேன்.
அந்த ஆசை நிறைவேறவே இல்லை.