பக்கம் எண் :

குடித்தனக்காரனாக195

Untitled Document
மனத்தில்  இன்னும்  அதிக மாறுதலை      உண்டாக்கிவிடக் கூடும்.
ஆகையால்         சிறந்த வழி,   நான் இங்கே வருவதை நிறுத்திக்
கொள்ளுவதே. இது நிச்சயமாக நம்   நட்பைப் பாதிக்க வேண்டியதே
இல்லை.”

     அந்தப் பெண்மணி உடனே பெரிய பாரம்  நீங்கியதைப் போல்,
“உங்களுக்கு நன்றி” என்றார்.

23. குடித்தனக்காரனாக

     ஒரு குடித்தனம் வைப்பதென்பது எனக்குப்    புதிய அனுபவம்
அன்று. ஆனால்,    பம்பாயிலும்       லண்டனிலும் நான் நடத்திய
குடித்தனத்திற்கும் நேட்டாலில் வைத்த குடித்தனத்திற்கும் வித்தியாசம்
உண்டு. இத்தடவை செலவில் ஒரு பகுதி, முற்றும்   கௌரவத்திற்காக
மட்டுமே ஆயிற்று. நேட்டாலில் இருக்கும்  இந்தியப் பாரிஸ்டர் என்ற
வகையிலும், ஒரு பிரதிநிதி என்ற வகையிலும்,     என் அந்தஸ்திற்கு
ஏற்றதான ஒரு குடித்தனத்தை அமைக்க வேண்டியது அவசியம் என்று
எண்ணினேன்.     பிரபலமான பகுதியில் அழகான ஒரு சிறு வீட்டை
அமர்த்தினேன்.    தக்க வகையில் அதில் மேசை,  நாற்காலி முதலிய
சாமான்களெல்லாம் போடப்பட்டன. சாப்பாடு எளிமையானது. ஆனால்,
ஆங்கில நண்பர்களையும்       இந்தியச் சக ஊழியர்களையும் நான்
சாப்பிடக்         கூப்பிடுவதால்   குடித்தனச் செலவு எப்பொழுதும்
அதிகமாகவே இருந்தது.

     ஒவ்வொரு      குடித்தனத்திற்கும்  ஒரு நல்ல வேலைக்காரன்
அத்தியாவசியம். ஆனால்,      ஒருவரை வேலைக்காரனாக வைத்து
நடத்துவது எப்படி என்பதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.

     எனக்குச் சகாவாகவும் உதவி செய்பவராகவும்     ஒரு நண்பர்
இருந்தார். சமையற்காரர் ஒருவர் உண்டு.       அவர் குடும்பத்தைச்
சேர்ந்தவராகவே ஆகிவிட்டார். என்    காரியாலய குமாஸ்தாக்களும்
என்னோடு தங்கி, அங்கேயே சாப்பிட்டும் வந்தனர்.

     இந்தப் பரிசோதனையில் ஓரளவுக்கு   நான் வெற்றி பெற்றேன்
என்றே நினைக்கின்றேன். ஆனால்,        வாழ்க்கையின் கசப்பான
அனுபவங்களில் ஒரு சிறிது இதில் இல்லாமல் போகவில்லை.

     என்னுடைய சகா    அதிக சாமர்த்தியசாலி.  அவர் என்னிடம்
உண்மையாக நடந்துகொண்டு வருகிறார்   என்றே நினைத்திருந்தேன்.
ஆனால், இதில்தான்      நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். என்னுடன்
தங்கியிருந்த ஆபிஸ்   குமாஸ்தா ஒருவர் மீது,  என்னுடைய அந்தச்
சகாவுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது.       குமாஸ்தா மீது நான்
சந்தேகம் கொள்ளும் வகையில் அவர்       ஒரு வலையை விரித்து
விட்டார். அந்தக் குமாஸ்தா நண்பரோ,  அதிக ரோஷக்காரர். தம்மீது
எனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என்பதைக்