பக்கம் எண் :

196சத்திய சோதனை

Untitled Document
கண்டதுமே அவர் வீட்டை மாத்திரமே  அன்றிக் காரியாலயத்தையும்
விட்டுப்   போய்விட்டார்.  இது எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு
வேளை      அவருக்கு நான்   அநீதி செய்திருக்கக் கூடும் என்று
உணர்ந்தேன்.      என் மனச்சாட்சியும் சதா  உறுத்திக் கொண்டே
இருந்தது.

     இதற்கு  மத்தியில்  சமையற்காரர்,  சில     தினங்கள் ஓய்வு
எடுத்துக்   கொண்டதாலோ ;   வேறு காரணத்திற்காகவோ வீட்டில்
இல்லை. அவர்   இல்லாதபோது வேறு ஒரு சமையற்காரரை வைக்க
வேண்டியது அவசியமாயிற்று.   புதிதாக வந்தவர்,  அசல் போக்கிரி
என்பது பின்னால்       தெரிய வந்தது. ஆனால் எனக்கோ, அவர்
கடவுள் அனுப்பிய தூதர் போன்றே ஆனார். என் வீட்டில் எனக்குத்
தெரியாமலேயே சில ஒழுங்கீனங்கள் நடந்து வருகின்றன  என்பதை
அவர், தான் வந்த   இரண்டு மூன்று நாட்களிலேயே கண்டு பிடித்து
விட்டார். இதைக்     குறித்து எனக்கு எச்சரிக்கை செய்வதென்றும்
தீர்மானித்தார்.     யாரையும் நான் எளிதில் நம்பிவிடக் கூடியவன்.
ஆனால், நேர்மையானவன் என்ற பெயர்    அப்பொழுதே எனக்கு
உண்டு. இதனால்,      அந்தப் புதுச் சமையற்காரர் கண்டு பிடித்த
விஷயம், அவருக்கு இன்னும்       அதிக அதிர்ச்சியை அளித்தது.
தினமும்   மத்தியானச் சாப்பாட்டுக்கு             ஒரு மணிக்குக்
காரியாலயத்திலிருந்து        நான் வீடு திரும்புவேன். ஒரு நாள் 12
மணிக்குச் சமையற்காரர்      தலைதெறிக்கக் காரியாலயத்திற்கு ஓடி
வந்தார்.       “தயவு செய்து உடனே வீட்டுக்கு வாருங்கள். நீங்கள்
பார்க்க வேண்டிய அதிசயம் ஒன்று இருக்கிறது” என்றார்.

     “அது என்ன?      சங்கதி இன்னது என்பதை நீ இப்பொழுது
சொல்லியாக       வேண்டும்.  அதைப் போய்ப் பார்க்க வேண்டும்
என்பதற்காக இந்த நேரத்தில் நான்   காரியாலயத்தை விட்டு எப்படி
வரமுடியும்?” என்றேன்.

     “நீங்கள் இப்பொழுது வராவிடில்   அதற்காகப் பிறகு வருத்தப்
படுவீர்கள். அவ்வளவுதான்        நான் சொல்ல முடியும்” என்றார்,
சமையற்காரர்.

     அவர் பிடிவாதத்தில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று
எண்ணினேன்.    ஒரு குமாஸ்தா உடன் வர வீட்டுக்குப் போனேன்.
சமையற்காரர் எங்களுக்கு முன்னால், வேகமாகப் போனார். என்னை
நேரே மேல்   மாடிக்கு     அழைத்துச் சென்றார்.   என் சகாவின்
அறையைச் சுட்டிக் காட்டினார். “அந்தக் கதவைத்  திறந்து நீங்களே
பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

     எனக்கு அப்பொழுது     எல்லாம் விளங்கிவிட்டன. கதவைத்
தட்டினேன். பதில் இல்லை!   சுவர்களெல்லாம்கூட அதிரும்படியாகக்
கதவைப்      பலமாக இடித்தேன்.   கதவு திறந்தது.  உள்ளே ஒரு
விபசாரியைக் கண்டேன். திரும்ப அங்கே    அடியெடுத்து வைக்கக்