பக்கம் எண் :

புயலுக்குப் பின் அமைதி235

Untitled Document
எனக்குப்   பாதுகாப்பு,    முன் எச்சரிக்கை      எதுவுமே தேவை
இல்லாதிருந்தும் என் பாதுகாப்புக்காக   இரு போலீஸாரை என்னுடன்
அனுப்பினர்.

     கப்பலிலிருந்து             இறங்கிய அன்று,  மஞ்சள் கொடி
இறக்கப்பட்டதும்,‘நேட்டால் அட்வர்டைஸர்’  பத்திரிகையின் பிரதிநிதி,
என்னைப் பேட்டி காண்பதற்குக் கப்பலுக்கு வந்தார். அவர் என்னைப்
பல கேள்விகள் கேட்டார். அவற்றிற்குப் பதில் அளிக்கையில், என்மீது
கூறப்பட்ட     ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நான்  மறுக்க முடிந்தது.
இந்தியாவில்   நான் செய்த பிரசங்கங்கள் யாவும் எழுதிப் படித்தவை.
இதற்காக       ஸர் பிரோஸ்ஷோ மேத்தாவுக்கு நான் நன்றி செலுத்த
வேண்டும். அந்தப் பிரசங்கங்களின்  பிரதிகளும் என்னிடம் இருந்தன.
நான் மற்றபடி         பத்திரிகைகளுக்கு எழுதியவைகளுக்கும் நகல்
வைத்திருந்தேன். என்னைப்           பேட்டிகாண வந்த நிருபரிடம்
அவைகளையெல்லாம் கொடுத்தேன்.   தென்னாப்பிரிக்காவில், அதிகக்
கடுமையான    பாஷையில் சொல்லாதது எதையும் நான் இந்தியாவில்
சொல்லி     விடவே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன்.
‘கோர்லாண்டு’,            ‘நாதேரி’      கப்பல்களில் பிரயாணிகள்
தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததில்,   என் சம்பந்தம் எதுவுமே இல்லை
என்பதையும் அவருக்குக் காட்டினேன். அப் பிரயாணிகளில் அநேகர்,
முன்பே அங்கே வசிப்பவர்கள்.     மற்றும் பலர் டிரான்ஸ்வாலுக்குப்
போகிறவர்களேயன்றி    நேட்டாலில் தங்க விரும்புகிறவர்கள் அல்ல.
அந்தக் காலத்தில் செல்வம் தேட வருகிறவர்களுக்கு, நேட்டாலைவிட
டிரான்ஸ்வால்தான் அதிகச் சௌகரியமானதாக இருந்தது. ஆகையால்,
இந்தியரில் அநேகர் அங்கே போகவே விரும்பினார்கள்.

     பத்திரிகை        நிருபருக்கு அளித்த பேட்டியும், என்னைத்
தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடர நான் மறுத்ததும், மிகச் சிறந்த
வகையில் என் பேரில்      நல்லெண்ணத்தை உண்டாக்கி விட்டன.
தங்கள் நடத்தைக்காக    டர்பன் ஐரோப்பியர்கள் வெட்கப்பட்டனர்.
நான் ஒரு பாவமும்      அறியாதவன் என்று பத்திரிகைகள் கூறின;
ஜனக்கூட்டத்தின்      செயலைக் கண்டித்தன.  இவ்விதம் என்னை
ஆத்திரத்துடன் கொல்ல முயன்றது,        எனக்கு அதாவது என்
லட்சியத்திற்கு            பெரும்      நன்மையாகவே முடிந்தது.
தென்னாப்பிரிக்காவில் இந்திய      சமூகத்தின் கௌரவம் இதனால்
உயர்ந்தது; என் வேலையையும் இது எளிதாக்கியது.

     மூன்று,         நான்கு நாட்களில் நான்    என் வீட்டிற்குத்
திரும்பினேன். சீக்கிரத்திலேயே வழக்கம்போல் வாழ்க்கையை நடத்த
ஆரம்பித்து விட்டேன்.          மேற்கண்ட சம்பவம் என் வக்கீல்
தொழிலிலும் வருமானம் அதிகமாகும்படி செய்தது.

     சமூகத்தின் கௌரவத்தை          அது அதிகமாக்கியதுடன்
சமூகத்தின்மீது இருந்த துவேஷத்தையும்     அது வளர்த்துவிட்டது.