என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருந்திருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்தியடைந்து விடுபவனாக இருந்திருந்தால், அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால்,சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிவரும்போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்று யார்தான் கூறமாட்டார்கள்? இந்திய இளைஞர்களை, அவர்களுடைய அடிமைத் தனத்தின் கோட்டைகளில் இருந்து - அதாவது அவர்களுடைய பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் இருந்து - வெளியேறிவிடுமாறு 1920 இல் நான் அழைத்தேன். ‘அடிமை விலங்குகளுடன் இலக்கியக் கல்வி கற்கப் போவதைவிட, சுதந்திரம் பெறுவதற்காக எழுத்து வாசனையே இல்லாமல் இருந்து, கல்லுடைத்து வாழ்வதே எவ்வளவோ மேல்’ என்று அப்பொழுது அவர்களுக்குச் சொன்னேன். எந்த ஆதாரத்துடன் நான் இந்தப் புத்திமதியைக் கூறினேன் என்பதை இளைஞர்கள் இப்பொழுது கண்டு கொள்ளலாம். என்னுடைய வக்கீல் தொழில் நன்றாகவே நடந்து வந்தது. ஆனால், அதைக் கொண்டு மாத்திரம் நான் திருப்தி அடைந்து விடவில்லை. மேற்கொண்டும் என்னுடைய வாழ்க்கையை எளிமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், என்னுடைய சகோதர மக்களுக்கு உருப்படியான தொண்டு எதையாவது செய்ய வேண்டும் என்பதும் என் மனத்தில் இடையறாத ஆர்வமாக இருந்து வந்தன. அந்தச் சமயத்தில் ஒரு குஷ்டரோகி என் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஒரு வேளைச் சாப்பாட்டோடு அவரை அனுப்பிவிட எனக்கு மனம் இல்லை. எனவே, என் வீட்டிலேயே அவரை இருக்கச் சொல்லி அவருடைய புண்களுக்குக் கட்டுக் கட்டினேன். அவருக்கு வேண்டிய மற்ற சௌகரியங்களையும் கவனித்து வந்தேன். ஆனால், நான் நிரந்தரமாக இப்படிச் செய்துகொண்டு போக முடியாது. இது என்னால் ஆகாது. எப்பொழுதுமே அவரை என்னுடன் வைத்துக் கொள்ளுவதற்கான உறுதியும் என்னிடம் இல்லை. ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளருக்காக இருந்த அரசாங்க வைத்திய சாலைக்கு அவரை அனுப்பினேன். ஆனால், என் மனம் மாத்திரம் அமைதி இல்லாமலேயே இருந்தது. |