பக்கம் எண் :

260சத்திய சோதனை

Untitled Document
     எங்களுடைய     சொற்ப சேவை,    அச்சமயம் வெகுவாகப்
பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது.   ‘எப்படியும்
நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே’      என்பதைப்
பல்லவியாகக் கொண்ட      பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள்
பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின்    சேவையை, ஜெனரல்
புல்லர், தமது அறிக்கையில்        பாராட்டியிருந்தார். இப்படையின்
தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.

     இந்திய சமூகம் அதிகக்   கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத்
தொழிலாளருடன் எனக்கு      நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று.
அவர்களும் அதிகமாக          விழிப்படைந்தார்கள். ‘ஹிந்துக்கள்,
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்,     தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள்
என்ற எல்லோரும் இந்தியரே; ஒரே தாய்  நாட்டின் மக்களே’ என்ற
உணர்ச்சி இவர்களிடையே ஆழ      வேர் ஊன்றியது. இந்தியரின்
குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை
ஒவ்வொருவருக்கும்   உண்டாயிற்று.  வெள்ளைக்காரரின் போக்கும்
தெளிவாக மாறுதலை         அடைந்துவிட்டது என்றே அச்சமயம்
தோன்றியது. யுத்த சமயத்தில்       வெள்ளையருடன் இந்தியருக்கு
இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது.  ஆயிரக்கணக்கான
வெள்ளைக்காரச்       சிப்பாய்களுடன்,     அப்பொழுது நாங்கள்
பழகினோம்.       அவர்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர்;
தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே   இருப்பதைக்
குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.

     சோதனை ஏற்படும் சமயங்களில்,    மனித சுபாவம் எவ்வளவு
உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும்  இன்பம்
தருவதாக உள்ள ஒரு      சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே
குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை.    சீவ்லி முகாமை நோக்கி நாங்கள்
போய்க்கொண்டிருந்தோம்.         லார்டு ராபர்ட்ஸின்    மகனான
லெப்டினெண்டு ராபர்ட்ஸ்     அங்கே   படுகாயமடைந்து இறந்தார்.
போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்தது எங்கள்
படையே. அன்று         வெயிலின்  புழுக்கம் அதிகமாக இருந்தது.
ஒவ்வொருவரும்          தாகத்தினால்    தண்ணீருக்குத் தவித்துக்
கொண்டிருந்தனர். தாகத்தைத்       தணித்துக்கொள்ள வழியில் ஒரு
சிற்றோடை      இருந்தது. ஆனால், அதில் யார் முன்னால் இறங்கித்
தண்ணீர் குடிப்பது? ‘வெள்ளைக்காரச்     சிப்பாய்கள் குடித்துவிட்டு
வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது’   என்று தீர்மானித்திருந்தோம்.
ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை.   முன்னால் இறங்கி நீர்
அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார்     முன்னால்
போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச   நேரம் அங்கே
மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.