பக்கம் எண் :

சுகாதாரச் சீர்திருத்தமும் பஞ்ச நிவாரணமும்261

Untitled Document
11. சுகாதார சீர்திருத்தமும் பஞ்ச நிவாரணமும்

     சமூகத்தைச் சேர்ந்த எந்த         ஓர் உறுப்பினரும், அந்தச்
சமூகத்திற்குப் பயன்படாதவராக  இருப்பதைச் சகித்துக் கொண்டிருக்க
என்னால்      எப்பொழுதுமே முடிவதில்லை.   சமூகத்தில் இருக்கும்
குறைபாடுகளை மறைப்பதையோ,     அக்குறைகளுக்கு உடந்தையாக
இருப்பதையோ நான் எப் பொழுதுமே     வெறுத்து வந்திருக்கிறேன்.
சமூகத்தின் குற்றங் குறைகளைப்       போக்கிக்கொள்ளாமல் அதன்
உரிமைகளைப் பெற மாத்திரம் போராடுவதும்    எனக்குப் பிடிக்காது.
இந்திய சமூகத்தின்             ஒரு குறையைக் குறித்து அதன்மீது
குற்றஞ்சாட்டப் பட்டு வந்தது.   அக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை
இல்லாமலும் இல்லை. ஆகையால் நான்     நேட்டாலில் குடியேறியது
முதல் அக்குற்றச்சாட்டிலிருந்து    நம் சமூகத்தை விடுவிக்க முயன்று
வந்தேன். ‘இந்தியர்       சுத்தத்தைக் குறித்து கவலைப்படாதவர்கள்;
தங்கள் வீடுகளையும்       சுற்றுப்புறங்களையும் அவர்கள் சுத்தமாக
வைத்துக்கொள்ளுவதில்லை’ என்று இந்தியர்மீது   குறைகூறப் பட்டது.
சமூகத்தில் முக்கியமானவர்களான         இந்தியர்கள், தங்கள் வீடு
வாசல்களைச் சுத்தமாக  வைத்துக்கொள்ள முன்னமேயே ஆரம்பித்து
விட்டனர். ஆனால்,        டர்பனில் பிளேக் ஏற்படக் கூடும் என்று
அறிவிக்கப்பட்ட போதுதான்            வீடுதோறும் சென்று பார்க்க
ஆரம்பித்தோம். ‘இதில் எங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்’  என்று
நகரசபை உறுப்பினர்கள் விரும்பினர். ஆகவே,  அவர்களைக் கலந்து
ஆலோசித்து, அவர்கள்     அங்கீகாரமும் கிடைத்த பின்னரே இந்த
வேலையில் இறங்கினோம். எங்கள்     ஒத்துழைப்பு, அவர்களுடைய
வேலையை   எளிதாக்கியதோடு,      எங்களுடைய சிரமங்களையும்
குறைத்தது. ஏனெனில், தொத்துநோய்கள் பரவும்போதெல்லாம் நிர்வாக
அதிகாரிகள் வெகு சீக்கிரத்தில் பொறுமையை   இழந்துவிடுகிறார்கள்;
கடுமையான       நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுகின்றனர்.
தங்களுக்குப் பிடிக்காதவர்களிடம் அவர்கள்     அதிகக் கடுமையாக
நடந்து கொள்ளுவதும் பொதுவான வழக்கம். இந்திய  சமூகம், தானே
வலியச் சுகாதார முறைகளை அனுசரிக்க முற்பட்டதால் இப்படிப்பட்ட
கொடுமையில் சிக்காமல் மீண்டது.

     ஆனால், எனக்கு வருந்தத்தக்க   அனுபவங்கள் சில ஏற்படாது
போகவில்லை. உரிமையைக் கோருவதில்     சமூகத்தின் உதவியைப்
பெறுவது எளிது.        ஆனால், சமூகம்   தன்னுடைய கடமையை
நிறைவேற்றச்       செய்ய வேண்டும் என்பதில்   அதே சமூகத்தின்
உதவியை நான்        அவ்வளவு   எளிதாகப் பெற்றுவிட முடியாது
என்பதைக் கண்டேன். சில இடங்களில் அவமதிக்கப்பட்டேன்.