பக்கம் எண் :

லார்டு கர்ஸானின் தர்பார் 277

Untitled Document
நான் விரும்புகிறேன்.”

     கோகலேயுடன் நான்    தங்கியதைப்பற்றிக் கூறுமுன்பு இந்தியா
கிளப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தச்
சமயம் லார்டு  கர்ஸான் தமது     தர்பாரை நடத்தினார். தர்பாருக்கு
அழைக்கப் பெற்றிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களில் சிலரும் இந்தக்
கிளப்பில் அங்கத்தினர்கள்.      கிளப்பில் இருக்கும்போது அவர்கள்,
எப்பொழுதும் வங்காளிகள்   வழக்கமாக அணியும் உயர்ந்த வேஷ்டி
கட்டி, சட்டையும் அங்கவஸ்திரமும் போட்டிருப்பார்கள்.     ஆனால்,
தர்பார் தினத்தன்று அவர்கள்       வேலைக்காரர்கள் அணிவதைப்
போன்ற     கால்சட்டைகளைப்    போட்டுக்கொண்டு, பளபளப்பான
பூட்ஸூகளும் அணிந்து இருந்ததைக்  கண்டேன். இதைப்பார்த்து என்
மனம் வேதனையடைந்தது.      இந்த உடை மாற்றத்திற்குக் காரணம்
என்ன என்று அவர்களில் ஒருவரை விசாரித்தேன்.

     “எங்களுடைய துர்பாக்கிய நிலைமை        எங்களுக்குத்தான்
தெரியும்.      எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும்  காப்பாற்றிக்
கொள்வதற்காக எவ்வளவு       அவமானங்களுக்கெல்லாம் நாங்கள்
உள்ளாக வேண்டியிருக்கிறது        என்பதையும் நாங்கள் மட்டுமே
அறிவோம்” என்று அவர் பதில் கூறினார்.

     “ஆனால், வேலைக்காரர்கள் அணியக்கூடிய      இந்தக் கால்
சட்டையும் பளபளப்பான பூட்ஸூகளும் எதற்காக?” என்றேன்.

     “எங்களுக்கும்  வேலைக்காரர்களுக்கும்  ஏதாவது வித்தியாசம்
இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று   அவர் சொல்லிவிட்டு மேலும்
கூறியதாவது: “அவர்கள்      எங்கள் வேலைக்காரர்கள்; நாங்களோ,
லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள்;    தர்பாருக்கு நான் போகாமல்
இருந்துவிட்டால், அதன் விளைவுகளை     நான் அனுபவிக்க நேரும்.
நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால், அது
ஒரு குற்றமாகிவிடும்.     லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப்
பெறுவதற்காக நான்    அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா?
அதெல்லாம் ஒன்றுமே இல்லை!”

     இவ்விதம் மனம் விட்டுப் பேசிய          அந்நண்பருக்காகப்
பரிதாபப்பட்டேன். இது மற்றொரு தர்பாரை எனக்கு நினைவூட்டுகிறது.

     ஹிந்து சர்வகலாசாலைக்கு லார்டு ஹார்டிஞ்சு அஸ்திவாரக் கல்
நாட்டியபோது அங்கே          ஒரு தர்பார் நடந்தது. ராஜாக்களும்
மகாராஜாக்களும் குழுமியிருந்தனர்.       இந்த விழாவுக்கு வருமாறு
பண்டித மாளவியாஜி என்னைப்    பிரத்தியேகமாக அழைத்திருந்தார்.
நானும் போயிருந்தேன்.

     மகாராஜாக்கள், பெண்களைப்போல    ஆடை அலங்காரங்கள்
செய்துகொண்டு வந்திருப்பதைப் பார்த்து,       மனம் வருந்தினேன்.