பக்கம் எண் :

330சத்திய சோதனை

Untitled Document
மரியாதைக்கும்         பரிதாபத்திற்கும் உரியவராகிறார். ‘பாவத்தை
வெறுப்பாயாக. ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே’   என்பது
உபதேசம். இது       புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும்,
நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான்    மிக அரிதாக இருக்கிறது.
இதனாலேயே பகைமை என்ற நஞ்சு         உலகத்தில் பரவுகிறது.

     இந்த            அகிம்சையே     சத்தியத்தை நாடுவதற்கு
அடிப்படையானதாகும்.        இவ்விதம் நாடுவது அகிம்சையையே
அடிப்படையாகக்            கொண்டதாக இல்லாது போகுமாயின்,
அம் முயற்சியே வீண் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து
வருகிறேன். ஒரு முறையை எதிர்ப்பதும்,      அதைத் தாக்குவதும்
முற்றும் சரியானதே. ஆனால்,     அம்முறையை     உண்டாக்கிய
கர்த்தாவையே எதிர்த்துத் தாக்குவது          என்பது தன்னையே
எதிர்த்துக்கொள்ளுவதற்கு ஒப்பாகும். ஏனெனில்,   நாம் எல்லோரும்
ஒரே மண்ணைக்கொண்டு     செய்த பாண்டங்கள்; ஒரே கடவுளின்
புத்திரர்கள். ஆகவே, நம்முள் இருக்கும்        தெய்வீக சக்தியும்
மகத்தானது. தனி ஒரு மனிதரை      அலட்சியம் செய்வது அந்தத்
தெய்விக சக்திகளை         அலட்சியம் செய்வதாகும். அப்போது
அம் மனிதருக்கு மட்டுமன்றி         உலகம் முழுவதற்குமே தீங்கு
செய்வதாக ஆகும்.

10 புனித ஞாபகமும் பிராயச்சித்தமும்

     எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பலவிதமான  சம்பவங்கள், பல
மதங்களையும் பல சமூகங்களையும்       சேர்ந்தவர்களுடன் நான்
நெருங்கிய         தொடர்பு      கொள்ளும்படி  செய்துவிட்டன.
இவர்களுடனெல்லாம் எனக்கு ஏற்பட்ட    அனுபவத்திலிருந்து நான்
ஒன்று கூற முடியும். உறவினர் என்றோ,   வேற்று மனிதர் என்றோ,
என் நாட்டினர்     என்றோ, பிற நாட்டினர் என்றோ, வெள்ளையர்
வெள்ளயரல்லாதார் என்றோ,       ஹிந்துக்கள் மற்ற மதத்தினரான
இந்தியர் என்றோ, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், யூதர்கள்
என்றோ         வேற்றுமை உணர்ச்சி எனக்கு இருந்ததே இல்லை.
இவ்விதப் பாகுபாடு எதையும் கற்பித்துக்கொள்ள   முடியாததாக என்
உள்ளம் இருந்தது என்று சொல்லலாம்.      இது என் சுபாவத்தோடு
ஒட்டியதாகவே இருந்ததால், இதை எனக்கு   இருந்த விசேட குணம்
என்று நான் கூறிக்கொள்ளுவதற்கில்லை.  என்னளவில் எந்தவிதமான
முயற்சியும் இல்லாமலேயே அது   எனக்கு ஏற்பட்டதாகும். ஆனால்,
அகிம்சை, பிரம்மச்சரியம், அபரிக்கிரகம்       (உடைமை வைத்துக்
கொள்ளாமை), புலனடக்கம்                ஆகிய நற்குணங்களை
வளர்த்துக்கொள்ளுவதற்காக நான்   இடைவிடாது முயன்று வந்தேன்
என்பதையும் முற்றும் உணர்ந்திருக்கிறேன்.