பக்கம் எண் :

ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு 335

Untitled Document
காண்கிறேன்.       ஆங்கில நண்பர்களைக் குறித்தே நான் எழுதப்
போகிறேன்.        அவர்களைக் குறித்து எதைக் கூறுவது, எதைக்
கூறாதிருப்பது என்பதே கஷ்டமான   அப்பிரச்சினை. பொருத்தமான
விஷயங்களைக் கூறாது போனால்     சத்தியத்தின் ஒளி மங்கிவிடும்.
இந்தச் சரித்திரத்தை     எழுதுவதிலுள்ள பொருத்தத்தைக் குறித்தே
நான் நிச்சயமாக அறியாதபோது,     பொருத்தமானது எது என்பதை
நேரே முடிவு செய்து விடுவதென்பது கஷ்டமானதாகும்.

     எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரங்களாவதற்கு  ஏற்றவையல்ல
என்பதை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதை இன்று
அதிகத் தெளிவாக அறிகிறேன்.          எனக்கு நினைவிருப்பவை
எல்லாவற்றையும் இக்கதையில்      நான் கூறவில்லை. உண்மையின்
முக்கியத்தை முன்னிட்டு நான்       எவ்வளவு கூறலாம், எவ்வளவு
கூறாமல் விடலாம் என்பதை யார் கூறமுடியும்?   என் வாழ்க்கையில்
ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும்
ஒரு தலைப் பட்சமானதுமான  சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின்
முன்பு என்ன மதிப்பு இருக்கும்?             நான் இது வரையில்
எழுதியிருக்கும் அத்தியாயங்களின் பேரில்,     குறும்புத்தனமானவர்
யாரெனும் குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தால்,  அவைகளைக்
குறித்து மற்றும்       பல விவரங்கள் வெளியாகலாம். இது விரோத
உணர்ச்சியுடன்         குறை கூறுபவரின்  குறுக்கு விசாரணையாக
இருந்தால், என்னுடைய      பாசாங்குகளில்            பலவற்றை
வெளிப்படுத்திவிட்டதாக அவர்      பெருமையடித்துக் கொள்ளலாம்.

     ஆகையால், இந்த அத்தியாயங்களை எழுதாமல் இருப்பது கூட
நல்லதல்லவா என்ற எண்ணமும் எனக்கு   ஒரு கணம் உண்டாகிறது.
ஆனால், என்னுள் இருக்கும்       அந்தராத்மாவின் தடை எதுவும்
இல்லாதிருக்கும் வரையில் நான் தொடர்ந்து எழுதியே ஆகவேண்டும்.
ஒரு காரியத்தைச் செய்ய      ஒரு முறை தொடங்கி விட்டால், அது
ஒழுக்கத் தவறானது என்று          நிரூபிக்கப்பட்டாலன்றி அதைக்
கைவிடவே கூடாது என்ற முனிவரின்   உபதேசத்தை நான் பின்பற்ற
வேண்டும்.

     விமர்சகர்களைத் திருப்தி செய்வதற்காக   நான் சுயசரிதையை
எழுதிக் கொண்டிருக்கவில்லை.       இதை எழுதுவதுகூடச் சத்திய
சோதனையில்        ஓர் அம்சமேயாகும்.      இதை எழுதுவதன்
நோக்கங்களில் ஒன்று, நிச்சயமாக என்  சக ஊழியர்களுக்குச் சிறிது
மன ஆறுதலையும், சிந்தனை       செய்வதற்குரிய விஷயத்தையும்
அளிப்பதுதான்.  அவர்களுடைய விருப்பத்திற்கு உடன்பட்டே இதை
எழுத ஆரம்பித்தேன்              என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ
ஜெயராம்தாஸு ம்     சுவாமி ஆனந்தும்      இந்த யோசனையை
வற்புறுத்தாதிருந்தால் இதை எழுதியே இருக்கமாட்டேன்.