பக்கம் எண் :

343

Untitled Document
இருந்திருக்கக்கூடும். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் நம்பிக்கையான
விவரங்களையும் தென்னாப்பிரிக்காவில்    இந்தியரின் உண்மையான
நிலைமையையும் அறிவதற்கு         வாசகர்கள் இப்பத்திரிகையை
ஆவலுடன் எதிர்நோக்கினர்.      ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும்
இடையே நெருங்கிய,             தூய சம்பந்தத்தை உண்டாக்கிக்
கொள்ளவேண்டுமென்று நான் எப்பொழுதும்     முயன்று வந்தேன்.
ஆகையால், நான் மனித சுபாவத்தின் எல்லாவிதத் தோற்றங்களையும்
சாயல்களையும்          கற்றறிவதற்கு இப் பத்திரிக்கை ஒரு நல்ல
சாதனமாயிற்று. இதய அந்தரங்க உணர்ச்சிகளைப் பொழிந்து எழுதிய
கடிதங்கள் ஏராளமாக,                பிரவாகமாக எனக்கு வந்து
குவிந்துகொண்டிருந்தன. எழுதியவரின் மனப்போக்கை  ஒட்டிச் சில
சிநேக முறையில் இருந்தன; சில          குற்றங்கூறுவனவாகவோ,
கசப்பானவையாகவோ இருந்தன. இந்தக்     கடிதங்களையெல்லாம்
படித்து, விஷயத்தை      அறிந்துகொண்டுபதில் சொல்வது எனக்கு
நல்ல படிப்பாக அமைந்தது.        என்னுடன் நடத்திய இக்கடிதப்
போக்குவரத்தின்   மூலம் சமூகம் தன்னுடைய எண்ணத்தை எனக்கு
அறிவிப்பது போலவே இருந்தது.         ஒரு பத்திரிக்கையாளரின்
பொறுப்பை முழுவதும் நான் அறிந்து கொள்ளுமாறும் அது செய்தது.
இந்த வகையில் நான் சமூகத்தில் அடைந்த செல்வாக்கு, வருங்காலப்
போராட்டத்தைக் காரிய சாத்தியமானதாகவும், கண்ணியமானதாகவும்,
எதிர்க்க முடியாததாகவும் ஆக்கியது.

     பத்திரிக்கைத் தொழிலின் ஒரே      நோக்கம் சேவையாகவே
இருக்கவேண்டும் என்பதை ‘இந்தியன் ஒப்பீனியன்’    ஆரம்பமான
முதல் மாதத்திலேயே அறிந்துகொண்டேன். பத்திரிக்கை, ஒரு பெரிய
சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப் பிரவாகம்.    எவ்விதம் கிராமப்
புறங்களையெல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசமாக்கி விடுமோ
அதே போலக் கட்டுத்திட்டத்திற்கு       உட்படாத பேனாவும் நாச
வேலைக்குத்தான் பயன்படும்.      கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே
வருவதாயிருந்தால், கட்டுத்திட்டமில்லாததைவிட        அது அதிக
விஷமானதாகும். கட்டுத்திட்டம்    உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக
இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது
என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை
இந்தச் சோதனையில் தேறும்? ஆனால்     பயனில்லாதவைகளாக
இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள்? மேலும்      இதில் முடிவு
கூறுவது யார்? பொதுவாக நல்லதையும்        தீயதையும் போலப்
பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து  இருந்துகொண்டுதான்
வரும். மனிதனே அதில் சிறந்ததைத்      தேர்ந்தெடுத்துக்கொள்ள
வேண்டும்.