பக்கம் எண் :

கடவுள் யாரைக் காக்கிறார் 369

Untitled Document
     ஆகையால், இந்தச் சோதனைகளைக் குறித்து    நான் இங்கே
கூறியிருப்பது, அவற்றின் வெற்றியை எடுத்துக்காட்டுவதற்காக அன்று.
எந்தச் சோதனையும் முழுமையான வெற்றியைக் கண்டது என்று நான்
கூறிக் கொள்ளுவதில்லை. வைத்தியர்கள்கூட,      தங்கள் சோதனை
பூரண வெற்றியை அளித்தது        என்று சொல்ல முடியாது. புதிய
சோதனைகளைச் செய்ய முற்படுகிறவர்,         முதலில் அவற்றைத்
தம்மிடமே செய்துகொண்டு பரீட்சிக்க வேண்டும் என்பதை  எடுத்துக்
காட்டுவதே என் நோக்கம்.      இதனால், உண்மையைத் துரிதமாகக்
கண்டுபிடிப்பது சாத்தியமாகிறது.         அத்துடன் யோக்கியமாகப்
பரிசோதனை செய்பவரைக் கடவுள்   எப்பொழுதும் காப்பாற்றுகிறார்.

     இயற்கை வைத்திய சோதனையில்    எவ்வளவு ஆபத்துக்கள்
உண்டோ, அவ்வளவு ஆபத்துக்கள் ஐரோப்பியர்களுடன் நெருங்கிய
தொடர்பை வளர்த்துக்கொள்ளுவதற்குச்  செய்யும் சோதனைகளிலும்
இருக்கின்றன. அந்த அபாயங்கள்      வேறு வகையானவை என்று
மட்டுமே சொல்லலாம். ஆனால்,            இந்தத் தொடர்புகளை
உண்டாக்கிக்கொள்ளுவதற்குச்     செய்த முயற்சியில் ஆபத்துக்கள்
இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை.

     என்னுடன் வந்து தங்குமாறு       போலக்கை அழைத்தேன்.
சொந்தச்       சகோதரர்கள் போல நாங்கள் வாழ ஆரம்பித்தோம்.
சீக்கிரத்தில் ஸ்ரீமதி போலக் ஆகவிருந்த பெண்ணுக்கும் அவருக்கும்
சில ஆண்டுகளுக்கு முன்பே        விவாகம் நிச்சயமாகியிருந்தது.
ஆனால், அனுகூலமான வேளையை     எதிர் பார்த்துத் திருமணம்
ஒத்தி   வைக்கப்பட்டிருந்தது. மண வாழ்க்கையில் நிலைபெறுவதற்கு
முன்னால் கொஞ்சம்                பணம் சம்பாதித்து வைத்துக்
கொள்ளலாமென்று ஸ்ரீ போலக்       விரும்பினார் என்பது   என்
அபிப்பிராயம். ரஸ்கினின் நூல்களை என்னைவிட   அவர் நன்றாக
படித்திருந்தார். ஆனால், அவருடைய       மேனாட்டுச் சூழ்நிலை,
ரஸ்கினின் உபதேசங்களை            உடனே  அனுபவத்திற்குக்
கொண்டுவருவதற்குத் தடையாக இருந்தது.         அவரிடம் நான்
பின்வருமாறு கூறி வாதாடினேன்:     “உங்கள் விஷயத்தில் உங்கள்
இருவருக்கும் இத்தகைய          ஒற்றுமை ஏற்பட்டிருக்கும்போது,
பொருளாதாரக்             காரணங்களுக்காக விவாகத்தை ஒத்தி
வைத்துக்கொண்டு        போவது நியாயமே அல்ல. வறுமை ஒரு
தடையாக இருக்குமாயின்,    ஏழைகள் மணம் செய்து கொள்ளவே
முடியாது. மேலும்,               இப்பொழுது நீங்கள் என்னுடன்
தங்கியிருக்கிறீர்கள். வீட்டுச் செலவைப்பற்றிய கவலையும்  இல்லை.
ஆகையால், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள்
மணம்      செய்துகொண்டுவிட       வேண்டும்.”   முந்திய ஓர்
அத்தியாயத்தில் நான் கூறியிருப்பதைப்போல, ஸ்ரீ போலக்குடன் ஒரு
விஷயத்தைக்