பக்கம் எண் :

தானியத்தில் பதர்409

Untitled Document
35 தானியத்தில் பதர்

     அதற்கு முன்னால் எனக்கு         என்றுமே தோன்றாத ஒரு
பிரச்னையை டால்ஸ்டாய் பண்ணையில்      ஸ்ரீ கால்லென்பாக் என்
கவனத்திற்குக் கொண்டு வந்தார்.    பண்ணையிலிருந்த பையன்களில்
சிலர் கெட்டவர்கள்,       கட்டுக்கடங்காதவர்கள் என்பதை முன்பே
கூறியிருக்கிறேன். இவர்களில்        ஒன்றுக்குமே உதவாதவர்களும்
இருந்தனர். இவர்களுடன் என் குமாரர்கள்   மூவரும் சேர்ந்து பழகி
வந்தார்கள். என் குமாரர்களின் தரத்திலிருந்த மற்றச்    சிறுவர்களும்
அது போலவே பழகி     வந்தார்கள். இது ஸ்ரீ கால்லென்பாக்குக்குக்
கவலையாகிவிட்டது. ஆனால்,         என் குமாரர்களை அடங்காப்
பிடாரிகளான அச்சிறுவர்களுடன்        சேர்த்து வைப்பது சரியல்ல
என்பதிலேயே அவருடைய கவனமெல்லாம் ஈடுபட்டிருந்தது.

     ஒரு நாள் அவர் மனம்விட்டுச்     சொல்லிவிட்டார். “உங்கள்
குமாரர்களைக் கெட்டவர்களுடன்        பழகவிடும் உங்கள் முறை
எனக்குப் பிடிக்கவே இல்லை. இதனால் ஏற்படக்கூடிய பலன் ஒன்றே
ஒன்றுதான். இந்தக் கெட்ட சகவாசத்தினால் அவர்களும்    கெட்டுப்
போவார்கள்” என்றார்.

     இப் பிரச்னை அச்சமயம்             எனக்குக் கலக்கத்தை
உண்டாக்கியதா       என்பது எனக்கு நினைவு இல்லை. ஆனால்,
அவருக்கு நான்              பதில் சொன்னேன் என்பது எனக்கு
ஞாபகமிருக்கிறது: என் பிள்ளைகளுக்கும்,   துஷ்டர்களாக இருக்கும்
பிள்ளைகளுக்கும் நான் எவ்வாறு வேற்றுமை பாராட்ட முடியும்? இரு
தரப்பார் விஷயத்திலும் நான்  சமமான பொறுப்பை வகிப்பவன். நான்
அழைத்தன் பேரிலேயே இக்குழந்தைகள்  இங்கே வந்திருக்கிறார்கள்.
கொஞ்சம் பணம் கொடுத்து        அவர்களை நான்      போகச்
சொல்லிவிட்டால் அவர்கள்         திரும்ப ஜோகன்னஸ்பர்க்கிற்கு
ஓடிப்போய்த் தங்கள் பழைய வழிகளிலேயே  நடக்கத் தலைப்பட்டு
விடுவார்கள். ஓர் உண்மையை       உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அவர்கள் இங்கே வந்திருப்பதனால் எனக்கு    ஏதோ நன்மையைச்
செய்திருப்பதாக அவர்களும்,      அவர்களுடைய பெற்றோர்களும்
நினைத்திருக்கக் கூடும்.            இங்கே அவர்கள் பலவிதமான
அசௌகரியங்களுக்கு      உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதை
நீங்களும் நானும் நன்றாக அறிவோம். ஆனால், என்       கடமை
தெளிவானது. அவர்களை நான்    இங்கே வைத்திருக்க வேண்டும்.
ஆகையால், என் குமாரர்களும்   அவர்களுடன் சேர்ந்து அவசியம்
வாழ்ந்தே ஆகவேண்டும். மற்றச்       சிறுவர்களைவிடத் தாங்கள்
உயர்வானவர்கள் என            இன்றிலிருந்து உணரும்படி என்
புத்திரர்களுக்கு நான் போதிக்கவேண்டும் என்று நிச்சயமாக நீங்கள்
விரும்பமாட்டீர்கள்.