பக்கம் எண் :

454சத்திய சோதனை

Untitled Document
கிடைத்தது என்பதற்கு ஓர் அத்தாட்சி வந்ததேயன்றி  வேறு பதிலே
இல்லை. பின்னால் லார்டு செம்ஸ்போர்டைச் சந்திக்கும் சமயம் வந்த
பிறகே     பரிகாரத்தை அடைய முடிந்தது. இதைப் பற்றிய விவரம்
முழுவதையும் அவருக்கு நான்        எடுத்துக்கூறிய போது அவர்
ஆச்சரியப்பட்டுவிட்டார். இதைப் பற்றி அவருக்கு        ஒன்றுமே
தெரியாமல் இருந்தது. நான் கூறியவைகளையெல்லாம் பொறுமையுடன்
கேட்டுக் கொண்டார். வீரம்காம் பற்றிய தஸ்தாவேஜூகளை  எல்லாம்
அனுப்பும்படி அப்பொழுதே          டெலிபோனில் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் தக்க சமாதானம் கூறாவிட்டால், அல்லது இருப்பதே சரி
என்று காட்டாவிடில், சுங்கத்தை நீக்கி  விடுவதாகவும் வாக்களித்தார்.
நான் வைசிராயைக் கண்டு பேசிய       சில தினங்களுக்கெல்லாம்
வீரம்காம் சுங்கம் நீக்கப்பட்டு        விட்டதெனப் பத்திரிகைகளில்
படித்தேன்.

     இந்தியாவில் சத்தியாக்கிரகத்திற்கு     இச்சம்பவம் ஆரம்பம்
என்று நான் கருதினேன். ஏனெனில்,   கத்தியவாரில் பகஸ்ரா என்ற
இடத்தில் நான் செய்த   பிரசங்கத்தில் சத்தியாக்கிரகத்தைப் பற்றிக்
கூறியிருந்தேன். பம்பாய் அரசாங்கத்தின்      காரியதரிசியை நான்
சந்தித்துப் பேசியபோது, நான்         சத்தியாக்கிரகத்தைப் பற்றி
அப்பிரசங்கத்தில் கூறியதை ஆட்சேபித்தார்.    “அது பயமுறுத்தல்
அல்லவா?” என்று அவர் கேட்டார்.           “பலம் பொருந்திய
அரசாங்கம் பயமுறுத்தல்களுக்கு    விட்டுக் கொடுத்துவிடும் என்று
நினைக்கிறீர்களா?” என்றார்.

     அதற்கு நான் கூறிய பதிலாவது:  “இது பயமுறுத்தலே அல்ல.
மக்களுக்குப் போதிப்பதே இது.       குறைகளை நிவர்த்தி செய்து
கொள்ளுவதற்குள்ள எல்லா         நியாயமான உபாயங்களையும்
மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியது என் கடமை. சுதந்திரத்தை
அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள்,    அந்த சுதந்திரத்திற்கான
எல்லா      வழிகளையும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும்.
அவ்வழிகளில் சாதாரணமாகக்       கடைசியான வழியாக இருந்து
வருவது பலாத்காரம். ஆனால்,            அதற்கு நேர் மாறாகச்
சத்தியாக்கிரகமோ, முற்றும் அகிம்சையோடு கூடிய ஆயுதம். அதன்
உபயோகத்தைக் குறித்தும் அதில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும்
விளக்கிக் கூற வேண்டியது என்      கடமை என்று கருதுகிறேன்.
பிரிட்டீஷ் அரசாங்கம் பலமுள்ள அரசாங்கம் என்பதில் சந்தேகமே
இல்லை. ஆனால், சத்தியாக்கிரகமே        மிகச் சிறந்த பரிகாரம்
என்பதிலும் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.”

     கெட்டிக்காரரான அந்தக் காரியதரிசி, நான் கூறியதை ஒப்புக்
கொள்ளத் தயங்கும் முறையில் தலையை அசைத்து, “பார்ப்போம்”
என்றார்.