பக்கம் எண் :

58சத்திய சோதனை

Untitled Document
வேண்டும்     என்பதற்காகவும்,     நான் எடுத்துக்  கொண்டிருந்த
விரதத்திற்காகவுமே இதுவரை நான் புலால் உண்ணாமல்     இருந்து
வந்தேன். ஆனால், அதே சமயத்தில் ஒவ்வோர் இந்தியரும்  மாமிசம்
சாப்பிடுபவராக வேண்டும்     என்று விரும்பி வந்தேன். ஒரு  நாள்
நானும் தாராளமாகவும், பகிரங்கமாகவும்  அப்படிச்    சாப்பிடுபவன்
ஆகவேண்டும்       என்றும்,   மற்றவர்களையும் இதற்குக் திருப்ப
வேண்டும் என்றும் கருதி,   அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்.      ஆனால்,   இப்பொழுது நான் சைவ உணவு
விரதத்தை விரும்பி மேற்கொண்டுவிட்டதால், இதைப் பரப்புவதே என்
வாழ்வின் லட்சியமாயிற்று.

15. ஆங்கிலக் கனவானாக நடிப்பு

     சைவ உணவில் நான் கொண்ட     நம்பிக்கை நாளுக்கு நாள்
வளர்ந்து வந்தது.   உணவு சம்பந்தமான    ஆராய்ச்சி நூல்களைப்
படிக்கவேண்டும் என்ற பசியை,   சால்ட்டின்      புத்தகம் எனக்கு
உண்டாக்கிற்று.   சைவ               உணவைப்பற்றிக் கிடைத்த
புத்தகங்களையெல்லாம்       வாங்கிப் படித்தேன்     ஹோவார்டு
வில்லியம்ஸ் எழுதியிருந்த ‘உணவு  முறையின் தருமம் (The Ethics
of Diet)’ என்ற நூல்,     ஆதிகாலத்திலிருந்து இன்றைய வரையில்
மனிதரின்     உணவு வகையைப் பற்றி    எழுதப் பெற்ற எல்லாப்
புத்தகங்களின் வரலாற்றுச் சரித்திரத்தையும் கூறுகிறது. பித்தகோரஸ்,
ஏசுநாதரிலிருந்து      தற்காலத்தில் வாழ்கிறவர்கள் வரை, எல்லாத்
தத்துவஞானிகளும்,  தீர்க்கதரிசிகளும்           சைவ   உணவு
உட்கொள்ளுபவர்களாகவே     இருந்திருக்கிறார்கள்    என்பதைக்
காட்டவும் இந்த நூல் முயன்றிருக்கிறது. டாக்டர்   அன்னா கிங்க்ஸ்
போர்டு எழுதிய ‘உணவுமுறையில் சரியான வழி     (The Perfect
Way in Diet ) ’      என்ற      நூலும்      கவர்ச்சிகரமானது.
தேகாரோக்கியத்தையும்,       சுகாதாரத்தையும்   குறித்து  டாக்டர்
அலின்சன் எழுதியிருந்தவையும்  அதே போல  உதவியாக இருந்தன.
நோயாளியின் ஆகாரத்தை  ஒழுங்குபடுத்துவதன்  மூலமே நோயைக்
குணமாக்கும்    முறையை     அந்த நூலில்      அவர் எடுத்துக்
கூறியிருந்தார்.   அவர்    சைவ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர்.
ஆகையால், தம்மிடம் வரும் நோயாளிகளுக்கும் கண்டிப்பான சைவ
உணவு  யோசனையைச் சொல்லி வந்தார். இந்த நூல்களையெல்லாம்
படித்ததன் பலனாக, உணவாராய்ச்சி செய்வதும்  என் வாழ்க்கையில்
முக்கியமான இடம் பெற்றுவிட்டது.     ஆரம்பத்தில்  தேகசுகத்தை
முக்கியமாகக் கருதியே பெரும்பாலும்     இந்தச்  சோதனைகளைச்
செய்து          வந்தேன்.   ஆனால்,   பிறகோ    சமயப்பற்று,
இச்சோதனைகளுக்குப் பிரதானமான நோக்கமாயிற்று.