பக்கம் எண் :

நாராயண ஹேமசந்திரர்89

Untitled Document
வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம்.    எல்லோருடனும் கலந்து
பழகும் குணம்   எனக்கு இல்லை என்பது குமாரி    மானிங்குக்குத்
தெரியும். நான் அவர்         வீட்டுக்குப் போனால் வாய் பேசாமல்
உட்கார்ந்திருப்பேன். என்னிடம் யாராவது பேசினால் மட்டும் அதற்கு
பதில் சொல்வேன். நாராயண ஹேமசந்திரரை அப்பெண்மணி எனக்கு
அறிமுகம் செய்து வைத்தார்.     அவருக்கோ ஆங்கிலம் தெரியாது.
அவருடைய உடைகளும்     விசித்திரமாக இருந்தன.  அவருடைய
கால்சட்டை விகாரமானது.   பார்ஸி மோஸ்தரில் இருந்த அவருடைய
பழுப்புநிறச் சட்டை, கசங்கிப்போய், அழுக்காக இருந்தது.  கழுத்தில்
‘டை’யோ, ‘கால’ரோ இல்லை. குஞ்சம் வைத்த கம்பளித் தொப்பியைத்
தலையில்     வைத்திருந்தார்.    நீண்ட தாடியும்       வளர்த்துக்
கொண்டிருந்தார்.

     அவர் ஒல்லியாகவும்    குள்ளமாகவும் இருப்பார்.  வட்டமான
அவர் முகம் முழுவதிலும்      அம்மைத் தழும்புகள். அவர் மூக்கு,
கூரியதென்றோ      சப்பையானதென்றோ       சொல்ல முடியாது.
எப்பொழுதும் தமது தாடியைக் கையினால் உருவிவிட்டுக்  கொண்டே
இருந்தார்.

     நாகரிகமானவர்கள் கூடியுள்ள இடத்தில் இத்தகைய விசித்திரத்
தோற்றத்தோடும்,  வேடிக்கையான   உடையோடும் இருப்பவர் மீதே
எல்லோருடைய கவனமும் செல்லும்.

     “உங்களைக் குறித்து நான் நிரம்பக் கேள்விப் பட்டிருக்கிறேன்”
என்று அவரிடம் சொன்னேன்.     “நீங்கள்      எழுதிய நூல்கள்
சிலவற்றையும்  படித்திருக்கிறேன். நான் இருக்கும் இடத்திற்கு அன்பு
கூர்ந்து வருவீர்களாயின் மகிழ்ச்சியடைவேன்” என்றேன்.

     நாராயண       ஹேமசந்திரரின் குரல்,   கொஞ்சம் கம்மலாக
இருக்கும். சிரித்த முகத்துடன் அவர்,  “வருகிறேன்.  நீங்கள் எங்கே
இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

     “ஸ்டோர் வீதியில்” என்றேன்.

     “அப்படியானால் நாம்    பக்கத்தில்தான் இருக்கிறோம்.  நான்
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.      எனக்குக்   கற்றுக்
கொடுக்கிறீர்களா?”

     “என்னால் முடிந்த எதையும்        கற்றுக் கொடுக்க எனக்கு
மகிழ்ச்சியே.      என்னால்   முடிந்த வரை முயல்கிறேன்.  நீங்கள்
விரும்பினால் உங்கள் இடத்திற்கே வருகிறேன்.”

     “வேண்டியதில்லை.     உங்கள் இடத்திற்கே நான் வருகிறேன்.
என்னுடன் மொழி பெயர்ப்புப் பயிற்சிப் புத்தகம்   ஒன்றும் கொண்டு
வருகிறேன்.”

     இவ்விதம் ஏற்பாடு செய்து கொண்டோம். சீக்கிரத்தில்  நாங்கள்
நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.