பக்கம் எண் :

88சத்திய சோதனை

Untitled Document
எனக்கு அப்பொழுது தெரியாது.    அச்சமயம்  கடவுள் என்னைக்
காப்பாற்றினார் என்பதை மாத்திரம்     தெளிவற்ற முறையில் நான்
அறிந்தேன்.     சோதனை நேர்ந்த   சமயங்களிலெல்லாம் அவரே
என்னைக் காத்தார்.‘கடவுள் காப்பாற்றினார்’ என்ற சொற்றொடருக்கு
நான் இன்று      ஆழ்ந்த பொருள்   கொள்ளுகிறேன்  என்பதை
அறிவேன். என்றாலும்,   அதன் முழுப்பொருளையும் நான் இன்னும்
அறிந்துகொள்ளவில்லை       என்றே உணர்கிறேன் அதன் முழுப்
பொருளையும் அறிந்து கொள்ளுவதற்கு, மேலான அனுபவம் ஒன்றே
உதவ முடியும்.   என்றாலும்,   ஆன்மீகத் துறையிலும்,  வக்கீலாக
இருந்தபோதும்,     ஸ்தாபனங்களை     நடத்தியபோதும்,  ராஜீய
விஷயத்திலும் எனக்குச் சோதனைகள் நேர்ந்த சமயங்களிலெல்லாம்
கடவுளே என்னைக் காப்பாற்றினார்       என்று சொல்ல முடியும்.
நம்பிக்கைக்கே ஒரு சிறிதும்   இடம் இல்லாதபோதும்,  உதவுவோர்
உதவத் தவறித் தேற்றுவாரும் ஓடிவிட்ட சமயத்திலும்,   எப்படியோ
அந்த உதவி வந்துவிடுவதைக் காண்கிறேன். ஆனால்,   எங்கிருந்து
அது வருகிறது      என்பதை நான் அறியேன்.       இறைவனை
வேண்டுவதும், பூசிப்பதும்,      பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள்
அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும்    எவ்விதம்
உண்மையான செயல்களோ அவற்றைவிடவும்  அதிக உண்மையான
செயல்கள் அவை. அவை மட்டுமே உண்மையானவை ;   மற்றவை
யாவும் பொய்யானவை என்று சொல்வதும் மிகையாகாது.

     அத்தகைய வழிபாடு      அல்லது   பிரார்த்தனை,   வாக்கு
வன்மையைக் காட்டுவதற்கு    உரியதன்று.   உதட்டிலிருந்து எழும்
வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிரார்த்தனை.
ஆகையால்,       அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே
இல்லாதவாறு, உள்ளத் தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின்,
எல்லாத்      தந்திகளையும்     தக்க சுருதியில்   கூட்டி வைத்து
விடுவோமாயின், தானே இனிய கீதம் எழுந்து, இறைவன் அருளைக்
கூட்டுவிக்கும்.     பிரார்த்தனைக்குப் பேச்சுத்     தேவையில்லை.
புலன்களின் முயற்சி எதுவும்           அதற்கு வேண்டியதில்லை;
உள்ளத்திலிருந்து காமக்        குரோதாதிகளையெல்லாம் போக்கிப்
புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த   சாதனை, பிரார்த்தனையே
என்பதில் எனக்குச்     சிறிதளவும் சந்தேகமே இல்லை.  ஆனால்,
அத்துடன் முழுமையான அடக்கமும் கலந்திருக்க வேண்டும்.

22. நாராயண ஹேமசந்திரர்

     ஏறக்குறைய அச் சமயத்தில்தான்    நாராயண  ஹேமசந்திரர்
இங்கிலாந்துக்கு வந்தார்.       அவர் எழுத்தாளர் என்று கேள்விப்
பட்டிருந்தேன். தேசிய இந்திய    சங்கத்தைச் சேர்ந்த குமாரிமானிங்