பக்கம் எண் :

174தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

வாசலுக்கு நுழைவாயிலாக இருந்த பகுதியில் எழுப்பப் பட்டுள்ள
கட்டடம் கலைச்சிறப்பு மிக்கதாகும்.

முகமது பள்ளிவாசலும், பேகம் சாகிபா பள்ளிவாசல்,
அமீர் பள்ளிவாசல், ஹசன்பாக் பள்ளிவாசல்
ஆகிய
பள்ளிவாசல்களும் திருச்சி நகரில் மகாகனம் பொருந்திய
ஆர்க்காட்டு மன்னர் நிதியிலிருந்து பரிபாலனம்
செய்யப்படுகிறது.

ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா

ஹஜ்ரத் நத்ஹர் வலி என்ற இஸ்லாமியப் பெரியார்
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வருகை தந்தார்.
இவர் துருக்கி அருகிலுள்ள ஹெய்ஸ்டான் பகுதியின்
மன்னராய் விளங்கியவர் எனப்படுகிறது. இவர் சமயப்
பணிக்காகத் தம்முடன் வந்தவர்களுடன் திருச்சியில் தங்கினார்.
திருச்சியை மையமாகக்கொண்டு இஸ்லாமிய சமயக்
கருத்துகளைப் பரப்பினார். இப்பெரியார் திருச்சி நகரில்
அடங்கிய இடத்தில் தர்கா எழுந்தது. இத்தர்கா தோன்றி
980 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்று
கணக்கிடப்படுகிறது. இத்தர்காவிற்கு அரசி மங்கம்மாளும்,
அரசி மீனாட்சியும்
மிகுந்த சொத்துக்களைத் தானமாக
வழங்கியுள்ளனர். இங்குள்ள தர்காவில் காணப்படும் குவிமாடம்
(Dome) தென்னிந்தியாவிலேயே மிகப் பெரியது என்று
கருதப்படுகிறது. சந்தா சாகிப் இறந்தபின் இத்தர்காவின்
அருகில் அடக்கம் செய்யப்பட்டார். நாவப் முகமதலி
இறந்தபின் இத்தர்காவின் ஒரு பகுதியில் அடக்கம்
செய்யப்பட்டார்.

ஆர்க்காட்டு நவாப் அன்வாருதீன் இத்தர்காவில்
அடங்கியுள்ள பெரியாரின் நினைவாகத் திருச்சி நகருக்கு
நத்ஹர் நகர்
என்று பெயரிட்டார். இப்பெரியாரின் நினைவு
விழா (சந்தனக்கூடு விழா) ஒவ்வோராண்டும் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.