பக்கம் எண் :

238தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

தமக்குக் கொண்டிருந்தார். இவருடைய முயற்சியினால் சமயம்
மாறிய அந்தணர்கள் தங்கள் மரபுப்படி பூணூல் அணிந்திருந்தனர்.
ஆனால், அந்த நூலில் இயேசுவின் சிலுவை அடையாளம் கட்டித்
தொங்கவிடப்பட்டிருந்தது. சமயம் மாறிய அந்தணர்களைப்போல்
நொபிலி பாதிரியார் நெற்றியில் சந்தனம் பூசிக்கொண்டார்.
மார்பில் பூணூல் அணிந்துகொண்டார். நொபிலி பாதிரியாரின்
சீரிய முயற்சியினால் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைப் பரப்பிய மூன்று மையங்களில்
மதுரை ஒன்றாயிற்று. கி.பி. 1645இல் நொபிலி பாதிரியார் மதுரை
கிறித்தவ இயக்கத்தை விட்டுச் சென்றார். இவர் சேலம், திருச்சி
முதலிய பகுதிகளுக்கும் சென்று சமயப் பணியாற்றினார்.

நொபிலி பாதிரியார் தங்கியிருந்த பகுதியில் புனித
ஜெபமாலை அன்னை ஆலயத்தின் இன்றைய கட்டடப்பகுதி
கி.பி. 1838இல் எழுந்தது.

புனித மரியன்னை பேராலயம் மதுரை நகரிலுள்ள
உரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் மிகப்பெரியதாகும்.
கி.பி. 1842இல் தந்தை கார்னியரால் இது கட்டப்பட்டது.
தந்தை ஹிப்போலைட் பிளாங்க் பதவிக்காலத்தில் (1879-1885)
இவ்வாலயம் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு இரண்டு நெடிய
கோபுரங்களும் அமைக்கப்பட்டன. ‘கோதிக்’ கலை அம்சங்களை
இவ்வாலயம் கொண்டுள்ளது. ‘கோவில் மாநகருக்கு’ மேலும்
அழகு கொடுக்கும் ஒரு கட்டடமாகப் புனித மரியன்னை பேராலயம் விளங்குகிறது.

மதுரை கோசாகுளம் புதூரில் லூர்து அன்னை ஆலயம்
உள்ளது. உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் இவ்வாலயம்,
கி.பி. 1920இல் சிறிய அளவில் சுவாமி எண்டாலின் என்பவரால்
எழுப்பப்பட்டது. கி.பி.. 1931இல் தந்தை கபிரியேல் கோமாஸ்
முயற்சியில் இவ்வாலயம் விரிவுபடுத்தப்பட்டது. கி.பி. 1951இல்
தனிப்பங்கான இவ்வாலயத்தில் தந்தை அமல்ராஜ் பதவிக்காலத்தில்
இன்று நாம் காணும் மூன்றுநிலைக் கோபுரங்கள் எழுப்பப்பட்டன.