பக்கம் எண் :

240தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இஸ்லாமியரின் பள்ளிவாசல்களும், தர்காக்களும்

மதுரை நகரில் கோரிப்பாளையத்தில் சையது சுல்தான்
அலாவுதீன் அவுலியா, சையது சுல்தான் சம்சுதீன் அவுலியா

என்ற இருவரின் தர்கா உள்ளது. இந்தத் தர்கா பழமைமிக்கதாகும்.
கட்டடக்கலைச் சிறப்புமிக்கதாகவும் உள்ளது. இந்த தர்கா உள்ள
இடமும், இதைச் சுற்றிய பகுதிகளும் கூன் பாண்டியன் காலத்தில்
(கி.பி. 7ஆம் நூற்றாண்டு) இஸ்லாமியரால் விலைக்கு
வாங்கப்பட்டதாக இங்குள்ள கி.பி. 1583ஆம் ஆண்டு வீரப்ப
நாயக்கர் காலக் கல்வெட்டு கூறுகிறது. தர்காவில் அடக்கம்
செய்யப்பட்டிருப்பவர்கள் மதுரையை ஆட்சிபுரிந்த சுல்தான்கள்
என்ற ஒரு கருத்தும், இஸ்லாமியப் பெரியார்கள் என்ற மற்றொரு
கருத்தும் உள்ளன. தர்காவில் காணப்படும் அதிட்டானம்,
கற்றூண்கள், நிலைவிளக்கு, கொடுங்கைகள் ஆகியவை இந்து
கோயிற்கலை அம்சங்களாக உள்ளன. தர்காவின்மீது
அமைக்கப்பட்டுள்ள குவிமாடம், அரைக்கோள வடிவமானது.
இக்குவிமாடம் ஒற்றைக் கல்லினாலானது. இவ்வளவு பெரிய
குவிமாடத்தைக் கட்டடத்தின் உயரே நிறுவியிருப்பது ஒரு
பொறியியல் சாதனையாகும்.

தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் முகம்மது நபியின்
வழிவந்த முகையதீன் ஆண்டவர் என்பவரது நினைவாக ஒரு
தர்கா உள்ளது. தெற்கு வெளி வீதியில் மினா நூருதீன் என்ற
பெரியார் அடக்கம் ஆகியுள்ள தர்கா உள்ளது. அரசரடி
சம்மட்டிபுரத்தில் கி.பி. 1759 முதல் 1764வரை மதுரையை
ஆட்சிபுரிந்த கான்சாகிப் என்பவர் இறந்தபின் அடக்கம்
செய்து எழுப்பிய தர்கா உள்ளது.

மேற்கூறிய தர்காக்களை அடுத்துள்ள பள்ளிவாசல்களைத்
தவிர மதுரை நகரில் காஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல்,
கட்றபாளையம்தெரு பள்ளிவாசல், மேலமாசி வீதி பள்ளிவாசல்,
யானைக்கல் அருகிலுள்ள சுங்கம்பள்ளிவாசல், தாசில்தார்
பள்ளிவாசல், முனிச்சாலைப் பள்ளிவாசல் ஆகிய முக்கியப்
பள்ளிவாசல்கள் உள்ளன.