பக்கம் எண் :

302தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஏர்வாடி

கீழக்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் ஏர்வாடி உள்ளது.
இங்கு சையது இப்ராஹிம் ஷஹீது, இவர் குடும்பத்தினர்,
இவருடன் வந்த வேறு பலர் ஆகியோரின் கல்லறைகள் உள்ளன.
சையது இப்ராஹிம் ஷஹீது
என்பவர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில்
அரபு நாட்டிலிருந்து இஸ்லாமிய சமயத்தைப் பரப்புவதற்காகத்
தமிழகத்திற்கு வந்த பெரியார் ஆவார். இவரது தர்காவிற்கு
இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும் வருகை
தருகின்றனர். இதனால் இத்தர்கா நாகூரைப் போன்று
இந்து-இஸ்லாமிய ஒருமைப்பாட்டிற்கு
ஒரு சின்னமாக
விளங்குகிறது.

மண்டபம்

இராமநாதபுரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவில் மண்டபம்
உள்ளது. மண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே
திட்டம்
ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள்
கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.
மண்டபத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் மண்டபம் முகாம்
(Mandapam Camp) ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து
2 கி.மீ. தொலைவில் கடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம்
உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும்
(Aquarium), காட்சிக்கூடமும் (Museum) உள்ளன. மண்டபத்திற்கு
அருகில் குருசடைத் தீவு உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு
ஏற்ற இடமாக உள்ளது.

மண்டபத்திற்கும் இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள
கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் பாலம் உள்ளது.
மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப்
போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.