இக்கோவிலைச் சேர்ந்த மிகப்பெரிய தேர் மரச்சிற்ப
வேலைமிக்கது.
ஆண்டாள் கோவில் சிற்பங்கள் நமது அரிய கலைச்
செல்வங்கள் ஆகும்.
ஆண்டாள் கோவிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில்
வைத்ய நாத சுவாமி கோவில் உள்ளது. கி.பி. 13ஆம்
நூற்றாண்டிற்கு முன்பே இக்கோவில் சிறந்து விளங்கியதாகக்
தெரிகிறது. பாண்டிய மன்னர்களின் திருப்பணிகள் இக்கோவிலில்
உள்ளன. திருமலை மன்னர் இக்கோவிலின் ஒரு மண்டபத்தைக்
கட்டினார். இக்கோவிலின் இறைவி சிவகாமி அம்மன் ஆவார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மற்றொரு முக்கிய கோவில்
கிருஷ்ணன் கோவில் ஆகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில்
மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்பர் என்பவரால் இக்கோவில்
கட்டப்பட்டது. இங்குள்ள சில கற்சிற்பங்கள் வேலைப்பாடு
மிக்கவை.
திருமலைமன்னர் அரண்மனை
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில், வடபத்ரசாயி கோயிலுக்கு அருகில்
(தெற்கு ரத வீதியில்) திருமலை மன்னர் (1623-1659) கட்டிய
சிறிய அரண்மனை உள்ளது. இவ்வரண்மனையிலுள்ள
குவிமாடங்களும், தூண்களும் திருமலையின் மதுரை
அரண்மனையை நினைவூட்டுகின்றன. இந்த அரண்மனைக்
கட்டடத்தின் ஒருபகுதி 1887லிருந்து காவல்துறையினரால்
பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்த அரண்மனைக்
கட்டடத்தில் உப கருவூலம், வட்ட அலுவலகம், நீதிமன்றம்
ஆகியவை உள்ளன. இங்குள்ள ஒரு கட்டடத்தின் முன்பகுதியில்
ஒரு பளிங்குச் சாசனம் உள்ளது. “முதல் உலகப் போரின் பொழுது
(1914-18) ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 52 பேர் போருக்குச்
சென்றதாகவும், அவர்களில் 8 பேர் உயிர் நீத்தனர்” என்றும்
கூறும் ஆங்கில வரிகள் இச்சாசனத்தில் உள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை மன்னர் மாளிகையைக்
காப்பது நமது கடமையாகும்.
|