பக்கம் எண் :

338தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

34. பாஞ்சாலங்குறிச்சி

தமிழ்நாட்டுப் பண்பாட்டின் பெருமையைக் கூறும் முக்கிய
இடங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி ஆகும். (பாஞ்சாலங்குறிச்சி
தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும்
திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது.)
வீரச்சுவைமிக்க பாஞ்சாலங்குறிச்சியின் வரலாற்றுச் சுருக்கம்
இப்பகுதியில் இடம் பெறுகிறது.

மதுரை நாயக்க மன்னர் விஸ்வநாதர் ஆட்சிக் காலத்தில்
(கி.பி. 1529-1564) தமிழ்நாட்டில் பாளையக்காரர் ஆட்சிமுறை
ஏற்படுத்தப்பட்டது. பாளையக்காரர்கள் தங்கள்
ஆட்சிக்குட்பட்ட பாளையத்தில் வரி வசூலிக்கும்
உரிமையைப் பெற்றிருந்தனர். வரிப் பணத்தில் ஒரு பகுதியை
இவர்கள் நாயக்க மன்னருக்குக் கொடுத்தனர். இவர்கள்
சுதந்தரமான படைபலத்தைப் பெற்றிருந்தனர். கி.பி. 1736இல்
மதுரை நாயக்க அரசு முடிவுற்றதற்குப்பின், கர்நாடக நவாபின்
அதிகாரத்தின்கீழ் தென்னாடு உட்பட்டது. இதனால்
பாளையக்காரர்களிடமிருந்து கப்பத் தொகை வசூலிக்கும்
உரிமையைக் கர்நாடக நவாப் பெற்றார். கர்நாடக நவாப்
முகமதலி ஆங்கிலேயரிடம் ஏராளமாகக் கடன்பட்டதால்
தமது கடன் தொகையைத் திருப்பித் தரும்வரை, தென்னாட்டில்
வரி வசூவிக்கும் உரிமையை 1792ஆம் வருட ஒப்பந்தப்படி
ஆங்கிலேயருக்குக் கொடுத்துவிட்டார்.

கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்
(1761-1799) கி.பி. 1790இல் பாஞ்சாலங்குறிச்சியின்
பாளையக்காரரானார். இவர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
என்ற மூன்றாம் கட்டபொம்மனின் மகன் ஆவார்.
‘கட்டபொம்மு’ என்பது வீரபாண்டிய கட்டபொம்மன்
குடும்பத்தினரின் மரபுப் பெயராகும். தென்னிந்திய வரலாற்றில்,
முக்கிய இடம் பெறும் வீரபாண்டிய கட்டபொம்மன், நான்காம்
கட்டபொம்மன் எனப்படுகிறார். கட்டபொம்மன் மரபினர்
ஆந்திரர்கள் ஆவர்.