(அகத்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களைக் கொண்டது
‘நாஞ்சில் நாடு’ எனப்படும்.) கன்னியாகுமரி மாவட்டத்தின்
தலைமையிடமாக நாகர்கோவில் இன்று விளங்குகிறது.
கி.பி. 19ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சபையினர்
வருகையினால் நாகர்கோவில் நகர் பெரிதும்
வளர்ச்சியடைந்துள்ளது எனலாம். இந்நகருக்கும் கன்னியாகுமரி,
திருவனந்தபுரம் நகர்களுக்கும் இடையில் முதன் முதலாக 1980ஆம்
ஆண்டு இருப்புப்பாதைப் போக்குவரவு ஆரம்பமானது. 1981ஆம்
ஆண்டுமுதல் இந்நகருக்கும் திருநெல்வேலிக்கும் இடையில்
இருப்புப்பாதைப் போக்குவரவு ஆரம்பமாயிற்று.
1981ஆம் வருட மக்கள் தொகைக் கணக்குப்படி தமிழ்
நாட்டிலேயே படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள
நகர், நாகர்கோவில் ஆகும் (78%). கி.பி. 1901ஆம் வருடம்
இந்நகரின் மக்கள் தொகை 25,782 ஆகும். 1981ஆம் வருட
மக்கள் தொகை 1,71,641.
நாகர்கோவிலிலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் இதர
சில பகுதிகளிலும் உள்ள நமது பண்பாட்டின் சின்னங்கள்பற்றிச்
சிறிது இங்குக் கூறப்படுகிறது.
நாகராசர் கோவில்
நாகர்கோவில் நகரில்
நாகராசர் கோவில் உள்ளது.
நாகராசர் கோவிலின் பெயரே இந்நகருக்கு ஏற்பட்டு ‘நாகர்
கோவில்’ என்ற பெயர் உண்டாயிற்று எனப்படுகிறது. நாகராசர்
கோவில் தொன்மைமிக்க ஒன்றாகும். திருஞானசம்பந்தரின்
பாடல்பெற்ற தலமாகும். இக்கோவிலில் நாகராசர், சிவன்,
அனந்தகிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் சந்நிதிகள்
உள்ளன. நாகராசர் கருவறையின் மேற்பகுதி ஓலையால்
வேயப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டில் இதுபோல் எங்கும் இல்லை”
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அனந்த கிருஷ்ணனின் கருவறை முற்றிலும் கல்லினாலானது.
மண்டபக் கொடுங்கைகளுடன் இது ஒரு கலைக்கூடமாகக்
காட்சியளிக்கிறது.
|