பக்கம் எண் :

378தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

3. கருவறையின் கூரைப்பகுதி மரத்தாலாகியது. இதன்
உச்சிப் பகுதியில் வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றுமாக இரு
மர வளையங்கள் கல் சங்கிலிபோல் காட்சியளிக்கின்றன.

4. பலி பீட மண்டபத்தின் இரு பக்கங்களிலும் ஒற்றைக்
கல்லினாலாகிய அழகிய சிற்பங்கள் உள்ளன. இலக்குமணர்,
இந்திரஜித், வேணுகோபாலன், சக்தி, நடராசர் ஆகிய சிற்பங்கள்
யாவும் அற்புதப் படைப்புகள் ஆகும். வேணுகோபாலனின்
இசையைக்கேட்டு மிருகங்கள் பலவும் மயங்கி நிற்பதைக்காட்ட,
குட்டிகள் தாய்மாறிப் பால் குடிக்கும் காட்சியை அமைத்த
சிற்பியின் கைவண்ணத்தையும் இந்து சமயத்தின் உயர்ந்த
தத்துவத்தையும் காட்டுகிறது.

5. வெளிப் பிரகாரத்திலுள்ள கற்றூண்களில் தீபலட்சுமிகள்
வரிசையாகக் காணப்படுவது ஒரு சிறந்த கலைக்காட்சியாகும்.
கேரளக் கலையம்சங்களைக் கொண்ட திருவட்டாறு ஆதிகேசவப்
பெருமாள் கோவில் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற சிறந்த
கோவிற் கலைச்செல்வமாகும்.

திருவட்டாறுக்கு அருகிலுள்ள திருநந்திக்கரையில் ஒரு
குகைக்கோவில் உள்ளது. இக்குகைக் கோவில் பகுதி
கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சமண சமயத் துறவிகளின் மையமாக
இருந்தது என்றும், இக்குகைக் கோவில் அவர்களால்
அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இக்குகைக் கோவிலிலுள்ள
கருவறையில் சிவலிங்கம் ஒன்று நிறுவப்பட்டது என்று
கூறப்படுகிறது.

குகைக் கோவிற் சுவர்களில் அழிந்த நிலையிலுள்ள
சேரர் கால ஓவியங்கள் உள்ளன. இவை கி.பி. 9ஆம்
நூற்றாண்டில் தீட்டப்பெற்றவையாகும். தலையில் மணி முடியும்,
கழுத்தில் மணி மாலையும்கொண்டு காணப்படும் ஒருவரின்
உருவம் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

திருச் சாரணமலை சமணச் சிற்பங்கள்

திருவட்டாறிலிருந்து 6 கி.மீ. தொலைவில் திருச் சாரண
மலை உள்ளது. சிதரால் என்ற கிராமத்தின் அருகில் இம்மலை
உள்ளது.