பக்கம் எண் :

102தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     கி.மு. 4ஆம் நூற்றாண்டிலோ அன்றி அதற்கும் முன்னிட்டோ
வாழ்ந்திருந்தவர் என்னும் கருத்து ஆய்வாளரிடையே நிகழ்ந்து வருகின்றது.
தொல்காப்பியத்தின் பழமையைக் கணக்கிடுவதற்குத் தொன்றுதொட்டு
வழங்கிவரும் கடல்கோள் செய்திகள், சிங்களநாட்டு வரலாறுகள் ஆகியவை
பொருந்துமாறு பயன்படுவதில்லை. இறையனார் அகப்பொருள்,
முல்லைக்கலி,34 சிலப்பதிகாரம் ஆகியவற்றில் இரு கடல்கோள்களைப்பற்றி
அறிந்து கொள்கின்றோம். முதல் கடல்கோள் தென்மதுரையை விழுங்கிற்று.
இரண்டாம் கடல்கோளில் கபாடபுரம் முழுகிப் போயிற்று. ஆனால்
‘தீபவமிசம்’, ‘மகாவமிசம்’, ‘இராசாவளி’ என்னும் சிங்களத்து வரலாறுகள்
மூன்று கடல்கோள்களைக் குறிப்பிடுகின்றன. முதல் கடல்கோள் கி.மு. 378-ல்
நிகழ்ந்ததாம், அதைத் தொடர்ந்து இலங்கைத் தீவு தென்னிந்தியாவினின்றும்
பிரிந்துவிட்டதாம். இரண்டாம் கடல்கோள் கி.மு. 504-ல் நிகழ்ந்து இலங்கைத்
தீவின் பெரும்பகுதியையும் தண்ணீரில் மூழ்கடித்து விட்டதாம். பிறகு கி.மு.
305-ல் ஏற்பட்ட மூன்றாம் கடல்கோளினால் இலங்கைக்கு ஊறு ஒன்றும்
நிகழவில்லையாம். இந்த மூன்றாம் கடல்கோளே கபாடபுரத்தையும், இரண்டாம்
சங்கத்தையும் அழித்ததென்றும் தொல்காப்பியம் கி.மு. 306-க்கு முன்பு
தோன்றியிருக்க வேண்டுமென்றும் டாக்டர் மா. இராசமாணிக்கனார்
கூறுவார்.35 சிங்கள வரலாறுகள் நம்பத்தக்கனவா என்பது ஒருபுறம் கிடக்க,
அவை குறிப்பிடும் மூன்றாம் கடல்கோள்தானா இரண்டாம் சங்கத்தை
முடிவுக்குக் கொண்டு வந்தது என்று ஐயுற வேண்டியுள்ளது. அதன் பின்னரும்
கடல்கோள் ஒன்று நேர்ந்திருக்கலாகாதா? கடல்கோள்களைப் பற்றிய
பழங்கதைகள் பல தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்றையே
இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எடுத்துக் கூறியிருக்கக் கூடும்.
பழங்கதைகளுக்கும் செவிவழி வரலாறுகட்கும் காலங்கணிப்பது எளிதன்று.

     பாணினி தம் நூலில் தென்னிந்தியாவைப்பற்றிக் கூறும்போது
கலிங்கத்துக்குத் தெற்கில் இருந்த நாடுகளைப்பற்றி எந்தச் செய்தியையும்
அளிக்கவில்லை என்றும், ஆனால், கி.மு.நான்காம் நூற்றாண்டில்
வாழ்ந்தவரான காத்தியாயனர் சோழரைப் பற்றியும் பாண்டியரைப் பற்றியும்
தம் நூலில் குறிப்புகள் தருகின்றார் என்றும் ஏற்கெனவே கண்டோம்.
தமிழ்நாட்டில் ஆரியரின்

     34. முல்லைக் கலி 4.
     35. தமிழ் இலக்கிய இலக்கணக் கால ஆராய்ச்சி. (1957) பக். 9. டாக்டர்
        இராசமாணிக்கனார்.